ஒரே நாடு ஒரே தேர்தல்: அகிலேஷ், சந்திரசேகர் ராவ் ஆதரவு; திமுக எதிர்ப்பு

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அகிலேஷ் யாதவ்
ஒரே நாடு ஒரே தேர்தல்: அகிலேஷ், சந்திரசேகர் ராவ் ஆதரவு; திமுக எதிர்ப்பு

புதுதில்லி: நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின்படி மாடு முழுவதும் மாநில சட்டப்பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று இந்திய சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் கருத்து தெரிவித்திருந்தது. மேலும், 2019-ஆம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தத்தையும் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின்படி மக்களவை, மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் கருத்து என்ன என்பகு குறித்து தெரிந்துகொள்வதற்காக தேசிய சட்ட ஆணையம் இரண்டு நாள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டது. அதன்படி இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. இதையடுத்து தில்லியில் நேற்று சனிக்கிழமை தொடங்கிய கருத்துக் கேட்பு கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகள், தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். 

இரண்டாம் நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய சமிதி, திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள், தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.  

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் மாநில சட்டப்பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு சமாஜ்வாதி ஆதரவு தெரிவிக்கிறது. அதேசமயம், கட்சி மாறுதல், குதிரை பேரம் போன்றவை நடத்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்களும் தேவை என கூறினார்.

தெலங்கானாவில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்குத் தனது பிரதிநிதி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். 

ஆனால், தமிழக எதிர்கட்சியான திமுக கடுமையாக எதிர்க்கிறது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் கூட்டாட்சி முறையைச் சிதைக்கும் முறையில் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல் முறையைக் கொண்டுவருகிறது. ஒரே நேரத்தில் மாநில சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கும், ஜனநாயகத்தின் கொள்கை செயல்பாட்டுக்கும் எதிரானது என்பதால் அதனை திமுக எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் மூத்த தலைவர் மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். அவர் கூட்டத்தில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் முன்வைத்தார்.

கூட்டம் முடிந்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும். கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் நோக்கமாக உள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள கேள்வி ஜனநாயகமா, பணச்செலவா என்பதுதான். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதைத் திசைதிருப்பும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நாட்டுக்கு அவசியமில்லை என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com