மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை: தெலுங்குதேச எம்.பி. அறிவிப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை: தெலுங்குதேச எம்.பி. அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 20) விவாதமும், அதைத் தொடர்ந்து நடைபெறும் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று தெலுங்குதேச கட்சி உறுப்பினர் ஜே.சி. திவாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். 

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கொண்டு வந்தது. அப்போது, அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டு அவை முறையாக நடைபெறாத சூழல் இருந்ததால் அந்தத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஏற்கவில்லை.

முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அந்தக் கட்சி கொண்டு வந்துள்ளது. இதில் தங்களுக்கு ஆதரவுகோரி பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில நாள்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். 

நேற்று புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மக்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மக்களவைத் தலைவரிடம் கேட்டுக் கொண்டார். அப்போது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் தீர்மானம் நிச்சயமாக தோல்வியையே சந்திக்கும். ஏனெனில் மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 3 இல் 2 பங்கு பெரும்பான்மை உள்ளது. மேலும் நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்' என்றார்.

இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை சில எதிர்க்கட்சிகள் அளித்துள்ளன; இது ஏற்கப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கே.ஸ்ரீனிவாஸ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வெள்ளிக்கிழமை விவாதமும், அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறும். அன்றைய தினம் முழுவதுமே நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதம் மட்டுமே நடைபெறும். கேள்வி நேரம் உள்பட வேறு எந்த வழக்கமான பணிகளும் இருக்காது என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கப்போவதில்லை என ஆந்திராவின் அனந்தபூர் தொகுதியின் தெலுங்கு தேச கட்சி உறுப்பினரான ஜே.சி. திவாகர் ரெட்டி கூறியுள்ளார். 

கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக தம் மீது குற்றச்சாட்டு வந்தாலும் அதனைத் தாம் பொருட்படுத்தப் போவதில்லை. மத்திய அரசு மற்றும் தெலுங்குதேச அரசு என இரண்டின் மீதுமே தாம் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளேன் என்று ஜே.சி.திவாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதல்முறையாக மக்களவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com