நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா மோடி..? 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை சில எதிர்க்கட்சிகள்
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா மோடி..? 

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்தச் சூழலில்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அந்தக் கட்சி கொண்டுவந்திருக்கிறது. இதில் தங்களுக்கு ஆதரவு கோரி பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில நாள்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். 

மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் தொடங்கியது. அவை தொடங்கியதுமே, மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை அளித்தன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை சில எதிர்க்கட்சிகள் அளித்துள்ளன; இது ஏற்கப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கே.ஸ்ரீனிவாஸ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 20) விவாதமும், அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறும். அன்றைய தினம் முழுவதுமே நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதம் மட்டுமே நடைபெறும். கேள்வி நேரம் உள்பட வேறு எந்த வழக்கமான பணிகளும் இருக்காது என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதையடுத்து நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுமா? அல்லது ஆட்சி முடியும் தருவாயில் உள்ள மோடியின் ஆட்சி வெற்றி பெறுமா? என்ற பேச்சு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

ஒரு அரசு தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டுமானால், மக்களவையில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்தை பெற்றிருக்க வேண்டும். அப்படியொரு பலம் ஆளும் அரசுக்கு இல்லை என எந்தவொரு கட்சி உறுப்பினருக்கு சந்தேகம் வந்தாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும். இதற்கு காரணங்கள் எதுவும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களவைத் தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றால் வாக்கெடுப்பு நடத்துவதுதான் ஒரே தீர்வு. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் மட்டுமே கொண்டுவர முடியும். மக்களவை விதிமுறை பிரிவு 198ன் கீழ், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து காலை 10 மணிக்கு முன்பாக மக்களவைத் தலைவரிடம் எழுத்துபூர்வமாக உறுப்பினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அதை, மக்களவைத் தலைவர் சபையில் வாசிப்பார். குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களது ஆதரவு இருந்தால்தான், நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தகுதி பெறும். 

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் ஒருநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முன்னதாக தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். ஒருவேளை, அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், உடனடியாக ஆட்சியை ராஜிநாமா செய்ய வேண்டும். 

பிரதமர் மோடி அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறும் என்றும் காங்கிரஸ் கட்சியும், மக்களவையில் கூட்டணிக் கட்சிகள் நீங்கலாக, ஆளும் பாஜகவுக்கு மட்டுமே 273 உறுப்பினர்களின் பலம் உள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள மோடி தலைமையிலான மத்திய அரசும் தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் தீர்மானம் நிச்சயமாக தோல்வியையே சந்திக்கும். மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மை உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் கட்சிகளின் பலம்

மொத்த உறுப்பினர்கள்: 543

பாஜக - 272
காங்கிரஸ் - 48
அதிமுக - 37
திரிணமூல் காங்கிரஸ் - 34
பிஜு ஜனதா தளம் - 20
சிவசேனா - 18
தெலங்கு தேசம் - 16
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி - 11
மார்க்சிஸ்ட் - 09
தேசியவாத காங்கிரஸ் - 07
சமாஜ்வாடி - 07
லோக் ஜனசக்தி - 06
ஆம் ஆத்மி - 04
சிரோன்மணி அகாலிதளம் - 04
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 04
இதர கட்சிகள் - 35
நியமன உறுப்பினர்கள் - 02
காலியிடம் - 09

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக மக்களைவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளதால், நாடு முழுவதும் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக அரசு தோல்வி அடையும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், கட்சிகளிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு தொற்றிக்கொண்டுதான் உள்ளது. 

கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளை இணைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அது தோல்வியையே சந்தித்தது. மக்களவையில் பாஜகவுக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதால் தற்போதைய நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியடையவே வாய்ப்பு உள்ளது. எனினும், பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இதுவொரு முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதிமுகவின் 37 உறுப்பினர்கள் கையில் இருப்பதால் பாஜக தைரியமாக உள்ளது. இருப்பினும் தங்களது எதிர்ப்பைக் காட்ட, முடிந்தவரை முட்டி மோத எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து உள்ளன.

அதேநேரம், பாஜகவுடன் அதிமுக நட்பு பாராட்டி வந்தாலும், சமீபத்திய வருமானவரித் துறை சோதனைகளை அடுத்து அதிமுக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பாஜகவை எதிர்த்து வாக்களிக்குமா அல்லது ஆதரித்து வாக்களிக்குமா என்ற இமாலய கேள்வி எழுந்துள்ளது.  

இதனிடையே காவிரிப் பிரச்னையின்போது நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியும் தமிழகத்துக்கு ஆதரவளிக்கவில்லை. பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தார்மிக அடிப்படையில் திமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் மத்தியில் ஆளும் பாஜக அரசு பறிக்கிறது. பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து பிரச்னைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். பழனிசாமியின் அறிவிப்பு மோடி அரசுக்கு மேலும் தைரியத்தையும் தெம்பையும் கூடுதலாகச் சேர்ந்துள்ளது. 

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் திவாகர் ரெட்டி அறிவித்துள்ளது எதிர்க்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மத்திய அரசின் நடவடிக்கை, தெலுங்கு தேச கட்சியின் செயல்பாடுகள் இரண்டுமே எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தி விட்டன. மக்களவையில் ஆளும் கட்சிக்கு போதிய அளவு பெரும்பான்மை உள்ளது. நாங்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எப்படியும் தோற்கடிக்கப்பட்டுவிடும். எனவே நான் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களிப்போவதில்லை. நான் போனாலும் போகாவிட்டாலும், தீர்மானம் தோற்பது உறுதி. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எங்கள் கட்சி கொறாடா உத்தரவு பிறப்பித்துள்ளதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது ஒரு பொருட்டே அல்ல’ என்று அவர் கூறியிருப்பது பாஜகவுக்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது. 

மக்களவையில் ஒரு உறுப்பினர்கூட இல்லாத திமுக, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எப்படி ஆதரவு தரும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் கேள்வி எழுப்பி உள்ளார். 

நாளை நடைபெற உள்ள பெரும்பான்மைக்கு 268 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு  மட்டும் 272 உறுப்பினர்கள் பலம் உள்ளது. இதுதவிர கூட்டணிக் கட்சிகள் பலமும் உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளன. 

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், ஒருவேளை கடைசிக்கட்டத்தில் அதிமுக எதிர்த்தே வாக்களித்தாலும், மோடி ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பே இல்லை. 

எதுவாக இருந்தாலும், நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களின் வரிப் பணத்தை நம்பிக்கையில்லா தீர்மானத்துக்காக, அதுவும் தற்போதைய ஆட்சி இன்னும் 8 மாதத்தில் முடிய இருக்கும் தருணத்தில், மக்களை ஏமாற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் தேவைதானா மக்களவைத் தலைவரே?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com