மக்கள் மனதில் வெறுப்பு, கோபத்தை வரவழைத்துள்ளார் மோடி: ராகுல் டுவிட்

மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு மக்களுக்கு வெறுப்பு மற்றும் கோபத்தைத்தான் விதைத்துள்ளார் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
மக்கள் மனதில் வெறுப்பு, கோபத்தை வரவழைத்துள்ளார் மோடி: ராகுல் டுவிட்

புதுதில்லி: மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு மக்களுக்கு வெறுப்பு மற்றும் கோபத்தைத்தான் விதைத்துள்ளார் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், காரசரமான விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகின. கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக சந்தித்த முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது, பிரதமரின் வெளிநாடு பயணம், கருப்பு பணம், பணமதிப்பிழப்பு குறித்து பேசிய ராகுல், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நம்பினார்கள். வேலைவாய்ப்பை அதிகரித்துத்தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், 24 மணி நேரத்துக்கு 400 பேருக்கு மட்டுமே மோடி அரசாங்கம் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும்; அதை அவர் தவிர்க்கிறார். பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது. நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம்' என ராகுல் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுலின் இந்த அனல் பறக்கும் பேச்சின் முடிவில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மோடியின் இருக்கைக்குச் சென்ற ராகுல், அவரை கட்டித்தழுவினார். தனது இருக்கைக்கு சென்ற ராகுலை மோடி அழைத்து கைகுலுக்கி காதில் ஏதோ முணுமுணுத்தார். ராகுலின் இந்தச் செயல், நேற்று மக்கள் மத்தியில் பெரும் ட்ரெண்டானது. அதுமட்டுமல்லாமல், செய்தித்தாள், ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது. 

இதைத்தொடர்ந்து, தீர்மானத்தின் மீது நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி கடைசியாக உரையாற்றினார். 

அப்போது, ராகுல் காந்தி மோடியை கட்டித்தழுவியதை சுட்டிக்காட்டி பிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா என்று கேலி செய்யும் வகையில் பேசிய மோடி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும். மாநில அரசுகளின் கருத்தை கேட்க காங்கிரஸ் மறுத்தது. ஆனால், அனைத்து மாநில முதல்வர்களோடு கலந்து பேசி ஒருமனதாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.

2009-2014 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் இருந்து கொள்ளையடித்தது. வங்கித் துறைகளில் பல சீர்த்திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இதனால், அரசுக்கு வர வேண்டிய பல வரிப் பணங்கள் வந்துகொண்டிருக்கின்றன. கறுப்பு பணத்தை ஒழிக்க பாஜக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. பணத்தை கொள்ளையடிப்பவர்களை தடுப்பதற்காக நேற்று கூட சட்டம் இயற்றப்பட்டது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் கட்சி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடனை அடைத்திருக்கிறது. காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. வேலைவாய்ப்புகள் குறித்து தவறான செய்திள் பரப்பப்படுகிறது. போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 1 ஆண்டில் போக்குவரத்துத் துறையில் 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு மோடி தனது உரையை கடுமையாகவே பேசி நிறைவு செய்தார். 

இந்நிலையில், நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி பேசியது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், மோடியின் பேச்சு, மக்களின் இதயத்தில் வெறுப்பு, அச்சம், பயம் மற்றும் கோபத்தை விதைத்துள்ளார் என்றும் தனது பேச்சை பில்டப் கொடுப்பதற்காகவே அவ்வாறு பேசியுள்ளார் என்றார்.

மேலும், இந்தியர்களின் இதயத்தில் அன்பு மற்றும் அக்கறையை பெற்றோம் என நிரூபிக்க போகிறோம். இதுதான் தேசத்தை உருவாக்குவதற்கான ஒரே வழியாகும் என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com