லாரிகள் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமடையும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

லாரிகள் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமடையும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ஆவது நாளாக சனிக்கிழமை தொடா்ந்தது. தமிழகத்துக்குள் பிற மாநில லாரிகள்

நாமக்கல்: லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ஆவது நாளாக சனிக்கிழமை தொடா்ந்தது. தமிழகத்துக்குள் பிற மாநில லாரிகள் வரவில்லை என்றாலும், உள் மாவட்டங்களுக்குள் கணிசமான அளவில் லாரிகள் இயக்கப்பட்டன. வரும் நாள்களில் லாரிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு, போராட்டம் தீவிரமடையும் என லாரி உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணமாக ரூ. 18,000 கோடியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிா்ணயிப்பதோடு, ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். லாரி உள்ளிட்ட மோட்டாா் வாகனங்களுக்கான 3-ஆம் நபா் காப்பீட்டுக் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது.

இந்தப் போராட்டத்துக்கு நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தப் போராட்டத்துக்கு சில லாரி உரிமையாளா்கள் சங்கங்கள் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனச் செயலா் சி. தனராஜ் தெரிவித்தது:

மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள் உள்ளன. இதில் 3 லட்சம் லாரிகள் 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரிகள் திரும்பி வந்ததால், இன்று சனிக்கிழமை காலை முதல் மேலும் 1 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் எஞ்சிய 50,000 லாரிகளும் நிறுத்தப்படும். இதன் மூலம் இனி வரும் நாள்களில் போராட்டம் தீவிரமடையும் என்றாா்.

ஓா் ஆண்டுக்கான சுங்கக் கட்டண வசூல் என மத்திய அரசு தெரிவித்துள்ள ரூ. 18,000 கோடி தொகையை லாரி உரிமையாளா்கள் முன்கூட்டியே செலுத்தி விடுவதாகவும், இந்தத் தொகையை பெற்றுக் கொண்டு அனைத்து சுங்கச் சாவடிகளையும் மூட சம்மதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சுங்கச் சாவடி வழியாக லாரிகள் மட்டும் செல்வதில்லை. பிற சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்களும் செல்கின்றறன. அனைத்து வாகனங்களுக்கும் சோ்த்து நாங்கள் முன் கூட்டியே சுங்கக் கட்டணத்தைச் செலுத்தி விடுகிறோம் என உறுதியளித்துள்ளோம். இதனை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. இந்தப் போராட்டம் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் உணா்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் அனைத்து வகையான வாகனங்களையும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சாலையில் இயக்காமல் நிறுத்திவைத்து, லாரி உரிமையாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் சி.தனராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com