இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வட மாநிலத்தவர்கள் மீது பழிகூறி நாடகமாடிய இளைஞர் கைது 

திருவொற்றியூர்:  எண்ணூர் ரயில் அருகே அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு வடமாநில வாலிபர்கள் மீது பலி சுமத்தி நாடகமாடிய கவியரசன் (22) என்பவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
    
எண்ணூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முகத்தில் கத்தி குத்து ஏற்பட்ட காயத்துடன் இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.  அவரை எர்ணாவூர் எர்ணீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த கவியரன் என்பவர் அந்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்திருந்தார். இது குறித்து  மருத்துவமனையிலிருந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் கவியரசனிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது தனக்கும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் தெரிவைச் சேர்ந்த குமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சில மாதங்களாகக் காதலித்து வந்தேன். வியாழக்கிழமை எண்ணூர் ரயில் நிலையம் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வந்த நான்கு இளைஞர்கள் தங்களைத் தாக்கி குமுதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.  பிறகு காயமடைந்த குமுதாவை மருத்துவமனையில் சேர்த்தேன் எனத் தெரிவித்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கவியரசனை அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அக்கம்பக்கத்திலும் விசாரித்தனர். இதில் கவியரசன் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை போலீஸார் தெரிந்து அவர்மீது சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து மீண்டும் நடத்திய தீவிர விசாரணையில்,  காதலியான குமுதா வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் வியாழக்கிழமை எண்ணூருக்கு வரவழைத்து விவாதித்தேன். அப்போது குமுதா தனது செயலை நியாயப்படுத்தியதையடுத்து ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் குத்தினேன்.  போலீஸாரிடமிருந்து தப்பிக்க வட மாநிலத்தவர்கள் மீது புகார் கூறினேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமுதாவும் ஒப்புக் கொண்டார். 
     
இதனையடுத்து எண்ணூர் காவல் நிலைய போலீஸார் கவியரசன் மீது வழக்குப் பதிவு அவரை கைது செய்தனர். பின்னர் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் புழல் சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர். வியாழக்கிழமை எண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் குத்தியதாகவும்,  அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிப்பட்டுள்ளார் என பரவியதையடுத்து எண்ணூர் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவாதி கொலை செய்யப்பட்டது போல எண்ணூரிலும் நடைபெற்றுவிட்டது என பலரும் பரப்பிய நிலையில் போலீஸார் நடத்திய துரித விசாரணையில் உண்மை கண்டறியப்பட்டதால் பரபரப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com