பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை: கேஜரிவாலுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பதிலடி 

ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுகள் "தவறானது, அடிப்படையற்றது" என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை: கேஜரிவாலுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பதிலடி 

புதுதில்லி: தில்லி ஐஏஎஸ் அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் கேஜரிவால் கருத்துக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த திங்கள்கிழமை முதல் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, துணை நிலை ஆளுநர் மாளிகை வரவேற்பு அறை சோஃபாவிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இப்போராட்டம்  இன்று ஞாயிற்றுக்கிழமை 7-ஆவது நாளாக தொடர்ந்தது.

கேஜரிவால் போராட்டத்திற்கு மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்கள் நேற்று துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். 

இந்நிலையில், கேஜரிவாலின் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தில்லி மண்டி ஹவுஸில் இருந்து லோக்  கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி மாபெரும் பேரணி நடத்தி வருகிறது ஆம் ஆத்மி கட்சி. 

இந்நிலையில், தில்லியில் முதல்வர் கேஜரிவால், துணைநிலை ஆளுநர் மாளிகையில் தர்ணா போராட்டம் நடத்தி வருவது தொடர்பாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுகள் "தவறானது, அடிப்படையற்றது" என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

"நாங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை. தில்லியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது" என்றும் "சில நேரங்களில் நாங்கள் விடுமுறை நாட்களிலும் கூட பணியாற்றி வருகிறோம்." தலைமைச் செயலர், பிரதான செயலர், துறைத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறோம். முதல்வர் முன்னிலையில், தில்லி தலைமைச் செயலர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஏஎஸ் அதிகாரி மணிஷா சக்சேனா தெரிவித்தார். 

போக்குவரத்து செயலர் வர்ஜா ஜோஷி கூறுகையில், நாங்கள் எங்களது பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். நாங்கள் முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே குற்றம்சுமத்தப்படுவதாகவும், பழிவாங்கப்பட்டதாக உணர்கிறோம். எனது தனிப்பட்ட நற்பெயர் மற்றும் அதிகாரி என்ற முறையில், நற்பெயரை கெடுக்க வேண்டும் என அரசியல் கட்சி என் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி எல்லை மீறியுள்ளது. நாங்கள் எங்களது பணியை செய்யவே இங்கு இருக்கிறோம். தயவுசெய்து எங்களை அரசிலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று ஜோஷி கூறினார். 

மற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுகையில், தேவையில்லாமல், இந்த விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி எங்களை தொடர்புபடுத்தியுள்ளது. நாங்கள் சட்டப்படி பணியாற்றி வருகிறோம். எங்களது பணிகளை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் மட்டுமே பதில் அளிக்கிறோம். ஆளும் ஆம் ஆத்மி தனிப்பட்ட முறையில் எங்களை விமர்சனம் செய்கிறது. தவறான தகவலையும் பரப்புகின்றனர். அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன் அவர்களது பணிகளை செய்து வருகின்றனர். நாங்கள் அமைச்சர்களையோ, அவர்களது தொலைபேசி அழைப்பையோ புறக்கணிக்கவில்லை. தில்லியில் உள்ள சிக்கல்கள் தனித்துவமானது, எதுவுமே எங்களது கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ஆனால், அரசியலமைப்பின் படி நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

தில்லியில் அரசு அதிகாரிகளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவைத்து, தில்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு நடத்துவதாக முதல்வர் கேஜரிவால் நேற்று சனிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com