யோகா உலகின் ஒருங்கிணைந்த சக்திகளில் ஒன்று: பிரதமர் மோடி உரை

யோகா உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் சக்தி படைத்த ஒரு கருவி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
யோகா உலகின் ஒருங்கிணைந்த சக்திகளில் ஒன்று: பிரதமர் மோடி உரை


டேராடூன்: யோகா உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் சக்தி படைத்த ஒரு கருவி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
 
கடந்த 2015ஆம் ஆண்டு முதல், ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் அனைவருக்கும் யோகா சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக கடந்த 2014-ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் 175 நாடுகளின் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

அதனடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது . இதைத் தொடர்ந்து , முதல் முதலாக சர்வதேச யோகா தினம் 2015-ஆம் ஆண்டில் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 

உத்தரக்கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகையில், அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். யோகா உலகின் ஒருங்கிணைந்த சக்திகளில் ஒன்று. 

டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை, ஜகார்த்தா முதல் ஜொஹனஸ்பர்க் வரை எங்கு நோக்கினாலும் யோகா தான் என்றும் கூறினார். அனைவரையும் ஒன்றிணைக்கும் வலிமையான ஆற்றலாக யோகா திகழ்கிறது. "ஒருவரின் உடல், மூளை மற்றும் ஆத்மாவை ஒன்றாக இணைக்கிறது யோகா. எனவே, ஒரு சமாதான உணர்வை யோகா உருவாக்குகிறது. 

கங்கை நதி பாயும் இடத்தில் யோகா செய்வது பெரும் பாக்கியம். இன்று சூரியன் உதிக்கும் இடமெல்லாம் யோகா நடைபெறுகிறது. இதற்காக இந்தியா பெருமை கொள்கிறது. நாள்தோறும் யோகா செய்து சூரியனை வரவேற்போம். 
யோகா மூலம் ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது. 

உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்தியாவில் தான் என்று கூறிய மோடி, உலகிற்கே இந்தியா அளித்த பரிசு யோகா. நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். யோகா பயிற்சியால் மன நிம்மதி அடையும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். மனம், அறிவு, உடலை இணைத்து யோகா அமைதியை உருவாக்குகிறது என்றார். 

யோகா மூலம் புதிய அனுபவம் கிடைக்கிறது. அவசர அவசரமாக பணிக்கு செல்பவர்களும் தினமும் யோகா செய்வது அவசியம். யோகா செய்வதால் உடல், மனம், ஆன்மாவை அமைதிப்படுத்தலாம். யோகாவால் மன அமைதி கிடைக்கும்; எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா. உண்மையில் யோகா தினம் நல்ல ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் உள்ள மிகப்பெரிய வெகுஜன இயக்கங்களில் ஒன்று.

"யோகா அழகாக இருக்கிறது, ஏனெனில் அது பழமையானது மட்டுமல்லாமல் நவீனமானது, இது நம்முடைய கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் சிறந்தது மற்றும் எதிர்காலத்தின் நம்பிக்கையின் நட்சத்திரம். நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு சரியான தீர்வு யோகா. தனிநபர்கள் அல்லது நமது சமுதாயத்திற்கு யோகா சிறந்த தூதுவர்.

யோகாவை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி மோடி பேசுகையில், "யோகா, சிறந்த நடைமுறையின் பாதுகாவலர்கள்" என்று இந்தியா கருதப்பட வேண்டும். யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

"நமது கலாச்சாரம் பற்றி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும், மாறாக நமது மரபு மற்றும் கலாச்சாரத்தை சந்தேகிக்கிறோம் என்றால், உலகம் நம்மை நம்புவதில்லை" என்று பிரதமர் மோடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com