நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு தேவை: புகைக்கும் காட்சி நீக்கப்பட வேண்டும்! 

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் என்ற தலைப்பிலான திரைப்படத்தில் முதல் சுவரொட்டி இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு தேவை: புகைக்கும் காட்சி நீக்கப்பட வேண்டும்! 

நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு தேவை: புகைக்கும் காட்சி நீக்கப்பட வேண்டும்! 

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் என்ற தலைப்பிலான திரைப்படத்தில் முதல் சுவரொட்டி இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது போன்று இடம் பெற்றிருக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதைவிட மோசமான இச்செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்குக்கான தலைசிறந்த ஊடகம் ஆகும். அவற்றின் மூலம் மக்களிடம் நல்லெண்ணங்களையும் விதைக்கலாம்; நஞ்சையும் விதைக்கலாம். ஒரு திரைப்படத்தின் முதல் சுவரொட்டியை வெளியிடும்போதே அத்திரைப்படத்தின் கதாநாயகன் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை வெளியிடுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும். இதன்மூலம் படத்தின் நாயகன் விஜய் முதல் படக்குழுவினர் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்கள்? புகைப்பது உடலுக்கும், உடல் நலனுக்கும் தீங்கானது என்று சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை அனைவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், விஜய் புகைக்கும் காட்சியைப் பார்க்கும் சிறுவர்கள் புகை நல்லது என நினைத்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட மாட்டார்களா? இது தான் தமது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் காட்டும் நல்வழியா? சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் விளம்பரம் தேடும் நோக்குடன் இவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அதை விட பெரிய இழிவு இல்லை.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு  அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகும். நேரடியாக புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்  ஒருபுறமிருக்க புகைப்பவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு  ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானவை. இத்தகைய கொடிய வில்லனை எதிர்த்து போராடுபவர்கள் தான் கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள். ஆனால், கதாநாயகர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் புகை வில்லனுக்கு புகழ் பாடுபவர்களாக நடந்து கொண்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

திரைப்பட நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது நடிகர்களுக்கான எதிர்ப்பு அல்ல. மாறாக, நடிகர்களின் புகை ஆதரவுக்கான எதிர்ப்பு தான். இதற்கும் காரணம் உள்ளது. இளைஞர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாவதற்கான முதன்மைக் காரணம் திரைப்படங்களில் இடம் பெறும் காட்சிகள் தான். திரையில் தோன்றும் தங்களின் நாயகர்கள் என்ன செய்கிறார்களோ, அதை அப்படியே கடைப் பிடிப்பது ரசிகர்களின் வாடிக்கையாகி விட்டது. மருத்துவ உலகின் புனித நூலாக போற்றப்படும் லான்செட் இதழ் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘‘பாலிவுட்: பலியா அல்லது நண்பனா’’ எனும் ஆய்வில், ‘இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன; சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு புகைக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன’ என்பது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. புகை விளம்பரங்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், திரைப்பட நிறுவனங்கள் அவற்றுக்கு மறைமுக விளம்பரம் கொடுப்பது பெரும் பாவமாகும்.

இதற்கெல்லாம் மேலாக உண்மை நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு தாத்தா, பாட்டி அவர்களின் 10 வயது பெயரனுக்கு பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டனர். அதற்கு,‘‘ எனக்கு சிகரெட் வேண்டும்’’ என்று பதிலளித்த அக்குழந்தை, காகிதத்தை சிகரெட் வடிவில் சுருட்டி ஸ்டைலாக வாயில் திணித்ததைப் பார்த்து அதிர்ந்து விட்டனர். அக்குழந்தையின் செயலுக்கு திரைப்படக் காட்சிகள் தான் காரணம் என்பதை உணர்ந்த தாத்தாவும், பாட்டியும் குழந்தைக்கு அறிவுரை கூறி திருத்தினர்.

திரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக  இருந்த போது, அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகர்கள் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை கைவிட்டனர். தொடக்கத்தில் இத்தகைய அறிவுரைகளை மதிக்காத நடிகர் ரஜினிகாந்த், பின்னர் 2012-ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் விழாவில் பேசும் போது,‘‘ அவர் (ராமதாஸ்) சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. ரசிகர்கள் புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்கள், திரைப்படங்களில் புகை மற்றும் மது காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் என பல நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டார். இதற்காக அவருக்கு லூதர் டெர்ரி விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகள் கிடைத்தன.

இத்தகைய நடவடிக்கைகளால் புகையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இப்போது சிகரெட் சாத்தானை தூக்கிப் பிடிக்கும் செயல்களில் நடிகர் விஜய் ஈடுபடக்கூடாது. திரைத்துறையினருக்கும் சமூகப் பொறுப்பு தேவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கிய விஜய்யின் செயல் பாராட்டத்தக்கது. அது தான் சமூகப் பொறுப்பு. அதேபோல், புற்றுநோய் மருத்துவமனைக்கு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சன் பிக்சர்சின் செயலும் சமூக அக்கறை தான். இந்த சமூக அக்கறைகள் உண்மையானவையாக இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com