காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை தொடங்கியது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரையின் முதல் குழு இன்று புதன்கிழமை (ஜூன் 27) காஷ்மீரில் 
காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை தொடங்கியது

    
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரையின் முதல் குழு இன்று புதன்கிழமை (ஜூன் 27) காஷ்மீரில் தொடங்கியது. இதையொட்டி, மாநில போலீஸார், துணை ராணுவத்தினர் உள்பட 40 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இமயமலையில் உள்ள குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரையாக சென்று தரிசிப்பது வழக்கம். இந்த யாத்திரை அமர்நாத் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைக்கு நிகழாண்டில் இதுவரையிலும் 2.11 லட்சம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று புதன்கிழமை தொடங்கியது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து ஜம்முவின் பகவதிநகர் முகாமில் தங்கிள்ள யாத்ரீகர்களில் முதல்கட்டமாக சில யாத்ரீகர்கள், அந்த முகாமில் இருந்து காஷ்மீரின் பல்டால், பகல்காம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களுக்கு வாகனங்களில் இன்று புதன்கிழமை காலை முதல் குழு புறப்பட்டது. முதல் குழுவை காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்களான வியாஸ், விஜய்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

யாத்ரீகர்கள் அவர்கள் அனைவரும் இன்று மாலை முகாம்களுக்கு சென்றடைவர். இதன்பின்னர் அந்த முகாம்களில் அவர்கள் ஓய்வெடுப்பர். இதையடுத்து, அங்கிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் இருக்கும் குகைக்கோயிலுக்கு நாளை யாழக்கிழமை காலை புறப்பட்டுச் செல்வர். மலைப்பகுதியில் அவர்கள் அனைவரும் கால் நடையாக நடந்து செல்வர். 40 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது

அமர்நாத் யாத்ரீகர்கள் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் ரேடியோ ஒலி அலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 

அமர்நாத் யாத்திரை செல்லும் அனைவரும் தகவல் தொடர்பு வசதி பெற்றிருப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக சிம்கார்டுகள் செயல்படும் நாள்கள் 7லிருந்து 10 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் போலீஸார், துணை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் என்று மொத்தம் 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com