உ.பி. இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம்

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 
உ.பி. இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் சமாஜவாதி முன்னிலை பெற்று வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. கோரக்பூரில் 47.45 சதவீதமும், பூல்பூரில் 37.39 சதவீத வாக்குகளும் பதிவாகின.

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரில் தொடர்ந்து 5 முறை யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ் உள்பட 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்

பூல்பூரில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தலில் போட்டியிடாத பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதியுடன் ஒரு உடன்பாட்டை மேற்கொண்டது. அதன்படி சமாஜவாதி வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு தெரிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.  இந்த நிலையில், கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  இதில், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜக முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்து வரும் வாக்குகள் எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்று வருகிறது. 

கோரக்பூர் தொகுதி:  சமாஜ்வாதியின் வேட்பாளர் பிரவீன் குமார் 2 லட்சத்து 12 ஆயிரத்து 61 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.  பாஜக வேட்பாளர் உபேந்திரா தத் சுக்லா 1 லட்சத்து 92 ஆயிரத்து 860 வாக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

பூல்பூர் தொகுதி: 14வது சுற்றுகள் முடிவில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் பட்டேல் 1 லட்சத்து 80 ஆயிரத்து 367 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் கவுசலேந்திரா சிங் பட்டேல் 1 லட்சத்து 52 ஆயிரத்து 740 வாக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

இரு மக்களைவை தொகுதிகளிலும் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com