தினகரன் பட்டபகலில் பச்சைப்படுகொலை செய்துவிட்டார்: நாஞ்சில் சம்பத் அதிரடி குற்றச்சாட்டு

டிடிவி தினகரன் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்துவிட்டார் என்றும் அவரது அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்
தினகரன் பட்டபகலில் பச்சைப்படுகொலை செய்துவிட்டார்: நாஞ்சில் சம்பத் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: டிடிவி தினகரன் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்துவிட்டார் என்றும் அவரது அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.  

நாஞ்சில் சம்பத் தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதி. சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் பாஸ்கரன், கோமதி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்.

சிறு வயதிலேயே பேச்சில் சிறந்து விளங்கிய நாஞ்சில் சம்பத், வைகோவின் அடிச்சுவட்டில் அரசியலை தொடங்கியவர் நாஞ்சில் சம்பத், திமுக தலைமைக் கழக பேச்சாளராக இருந்து வந்தார். திமுகவில் இருந்து வைகோ விலகி தனிக்கட்சி தொடங்கிய உடன் மதிமுகவில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை பரபரப்புச் செயலாளராக செயல்பட்டு வந்தார் சம்பத். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சைக் கேட்கக் கூடும் மதிமுக தொண்டர்கள் கூட்டம் போன்று நாஞ்சில் சம்பத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் கூடியது. 

வைகோவின் போர்வாள் என புகழப்பட்ட நாஞ்சில் சம்பத், மதிமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் வெளியேறிய போது, கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும் என்று சொன்னவர். மதிமுக ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டுப் போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது.

ராமாயணத்தில் வரும் அனுமன் தனது நெஞ்சில் ராமன் இருப்பதை பிளந்து காட்டியது போல, எனது ஒரே தலைவன் வைகோ தான். அவரைத் தவிர என் நெஞ்சில் யாரும் இல்லை என மார்பை பிளந்து காட்டவும் தயாராகவும் இருக்கிறேன். வைகோவுடன் பல ஆண்டுகள் அரசியல் பயணம் செய்த நாஞ்சில் சம்பத் நாடாளுமன்றத்துக்கோ, சட்டப்பேரவைக்கோ செல்ல ஆசைப்படவில்லை என்று தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், மதிமுகவில் தான் ஓரம் கட்டப்படுவதாக தெரிவித்த சம்பத், 2012-இல் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் முதன்மை பேச்சாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு இனோவா காரையும் வழங்கினார் ஜெயலலிதா. அது முதல் இனோவா சம்பத் என்று பலரும் கிண்டலடித்தனர். நாஞ்சில் சம்பத் மீதிருந்த அவதூறு வழக்குகள் திரும்ப பெறப்பட்டன.

இதனிடையே உடல்நலக் குறைவால் 2016-இல் ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சசிகலாவை எதிர்த்தார். சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச் செயலாளர் ஆகும் தகுதி இருக்கிறது என்றால் அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளும் தகுதி எனக்கில்லை என்றார். ஜெயலலிதா தனக்கு கொடுத்த காரை அதிமுக தலைமையிடம் திருப்பிக்கொடுத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறினார்.

இதையடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன் மூலம் சம்பத்திடம் சமாதானம் பேசினார் சசிகலா. உடனே இனோவா காரை பெற்றுக்கொண்டு அதிமுகவிற்கு திரும்பினார். சசிகலா புகழ் பாடினார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே, உடன் டிடிவி தினகரன் புகழ் பாட ஆரம்பித்தார். ஒரே திராவிட தலைவன் என்றும் தன்மானம் உள்ள ஒரே தலைவன் என்றும் வாய்க்கு வந்ததை எல்லாம் புகழ்ந்தும்,  டிடிவி. தினகரனுக்கு நிழலாக இருந்து அவருடைய அரசியல் நடவடிக்கைகளை கண்மூடித்தனமாக ஆதரித்தும், மேடைகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் பேசி வந்தார். அதிமுகவின் இரட்டை இலை சின்ன வழக்கில் தில்லி சிறையில் இருந்து தினகரன் சென்னை திரும்பிய போது விமான நிலையம் சென்ற இருவரில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்த போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்று கடுமையாக  விமர்சித்த சம்பத், தினகரனை வீர தலைவன் என்றெல்லாம் புகழ்ந்தார். 

ஆளுநர் பன்வாரிலால் தமிழக உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வை, ஆளுநர் ஆட்சிக்கான ஒத்திகையே என்றும் ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கு ஏற்படும் என்றும் விமர்சனம் செய்தார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசுகையில், எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று கிண்டலும் கேலியும் பேசிய சம்பத், சமீபகாலமாக அவரது மேடைகளில் தென்படாமல் ஒதுங்கியே இருந்த வந்தார். 

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (மார்ச்.15) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன், தனது புதிய அமைப்பின் தனது அமைப்பின் பெயரை 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று அறிவித்தார். மேலும் கருப்பு-வெண்மை-சிவப்பு வண்ண கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ள அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். 

தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத், கடந்த வாரம் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி பொதுக்கூட்டத்தை புறக்கணித்தார். இதுகுறித்து கேட்டதற்கு குரங்கணி தீ விபத்தில் தனது மைத்துனர் மகன் இறந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், தினகரன் செயல்பாட்டால் கசந்துபோன நாஞ்சில் சம்பத், தினகரனின் புதிய அமைப்பின் பெயரில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அண்ணாவும் திராவிடமும் இல்லாத அணியில் என்னால், அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு பேச முடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும் நான் இல்லை என்று இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். 

தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவர் அண்ணா, மனிதனை மனிதனாக எண்ணியதன் பெயர் திராவிடம். திராவிடமும் அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்றவர் பட்டபகலில் பச்சைப்படுகொலை செய்துவிட்டார் தினகரன் என்று தெரிவித்தார்.

மேலும் தினகரன் அணியில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் வாழ்வில் இருந்துமே விலகுவதாக நாஞ்சில் சம்பத் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
 
உண்மையாக உழைப்பதும், வருத்திக்கொண்டு கடமையாற்றுவதே என்னுடைய இயல்பாகி போனது. இனி எந்தக் கொடியையும் தூக்க மாட்டேன், எந்த தலைமையின் கீழும் செயல்பட மாட்டேன். அரசியல் என்ற சிமிழுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் இனி என்னை இலக்கிய மேடைகளில் காணலாம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். 

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மேடைகளில் ஒலித்த நாஞ்சில் சம்பத் குரல் இனி இலக்கிய மேடைகளில் மட்டும் தான் ஒலிக்குமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com