யார் இந்த நடராஜன்...? 

கணவரா அல்லது இடையில் தோழியா? என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுத்த சசிகலா. அன்று முதல் கணவன் மனைவி
யார் இந்த நடராஜன்...? 

சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன்(76) சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இதையடு அவரது உடல் சொந்த ஊரான விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தவர் நடராஜன்.

மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடராஜன், ஹிந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1965-ஆம் ஆண்டிடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தஞ்சையில் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நடராஜன் போராட்டம் நடத்தினார்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம், அறிஞர் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார். பின்னர், 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக பணியாற்றினார். 

1975-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் -நடராஜனுக்கும் திருமணம் நடைபெற்றது.

1980-இல் தென் ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராஜன் பணியாற்றினார். அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மூலம் ஜெயலலிதாவுடன் நடராஜனுக்கு அறிமுகம் கிடைத்தது.

பல ஆண்டுகளாக புதிய பார்வை பத்திரிகையை நடத்தி வந்த நடராஜன், பல்வேறு பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982-இல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா. ஜெயலலிதா உடன் நட்பு ஏற்பட்டது. சாதாரணமாக வேதா நிலையத்திற்குள் போன சசிகலா நிரந்தரமாகவே வேதா நிலையத்தில் தங்கிவிட்டார். 

1984-இல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகம் முழுவதும் ஜெயலலிதா உடன் பிரசாரத்தில் வலம் வந்தார். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக தனது தம்பி திவாகரனையும் உடன் அழைத்து வைத்தார். 

1985-இல் ஜெயலலிதா நேரடி அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடராஜன். 1991-இல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார். 

இதனிடையே ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தான் அளித்து வருவதாக நடராஜன் எங்கோ சொன்னதாக தகவல் ஜெயலலிதாவின் காதுக்கு எட்ட அதுமுதல் நடராஜன் - ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடித்ததால் பிரிவு ஏற்பட்டது.

இதையடுத்து கணவரா அல்லது இடையில் தோழியா? என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுத்த சசிகலா. அன்று முதல் கணவன் மனைவி உறவை விட தோழி தான் முக்கியம் என்பதை நிரூபித்து ஜெயலாலிதாவுடன் தங்கி விட்டார் சசிகலா.

புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளிவருகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன் (சசிகலா நடராஜன்). 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்போது வரை வெளியாகி வருகிறது. 

இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

ஆண்டுதோறும் பொங்கலையொட்டி, தமிழர் கலை இலக்கிய விழாவை அவர் நடத்தி வந்தார். அதில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஹிந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு, உயிருக்கு நேர், அண்ணாவின் சொற்பொழிவுகள், உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கைப் போர் குறித்த புத்தகத்தை எழுதியுள்ள நடராஜன், அங்கு உயிரிழந்தோர் நினைவாக, முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் நினைவுமண்டபம் அமைவதற்கு பெரிதும் பாடுபட்டார்.

இந்நிலையில்  மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச்.16-ஆம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. 

இன்று செவ்வாய்கிழமை (மார்ச்.20) நள்ளிரவு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எம்பாமிங் செய்யப்பட்டது. அதிகாலையில், பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீட்டுக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இன்று காலை 11 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படு இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

கணவர் நடராஜன் மரணமடைந்ததை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா பரோல் கோரி இன்று மனு அளிக்க உள்ளார். சிறை அதிகாரிகள் அனுமதி கிடைத்ததும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்கப் புறப்படுவார் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com