இராக்கில் 39 இந்தியர்கள் கடத்தி கொலை: ஐக்கிய நாடுகள் சபை இரங்கல்

இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட  சம்பவத்திற்கு ஐக்கிய
இராக்கில் 39 இந்தியர்கள் கடத்தி கொலை: ஐக்கிய நாடுகள் சபை இரங்கல்

ஜெனீவா: இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட  சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இருந்து சென்ற 40 தொழிலாளர்களையும் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2014-இல் கடத்திச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், வங்கதேசத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்களையும் அந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரைச் சேர்ந்த ஹர்ஜித் மாசி என்பவர் மட்டும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்து விட்டார். அவர் செய்தியாளர்களிடம் ஏற்கெனவே பேசும்போது, மற்ற இந்தியர்களை பயங்கரவாதிகள் கொலை செய்ததை தாம் பார்த்ததாகக் கூறினார். எனினும் அதை மத்திய அரசு மறுத்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று செவ்வாய்கிழமை விளக்கம் அளித்துப் பேசினார். 

இராக்கில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில், நம்பகமான ஆதாரம் இல்லாமல் அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. இந்தியர்களின் கதி என்ன என்று அறிவதற்காக தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ராடார் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. அதன் விளைவாக, படோஷ் நகருக்கு அருகில் உள்ள மிகப்பெரிய இடுகாட்டில் உள்ள மண்மேட்டுக்கு அடியில் இந்தியர்களின் உடல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த உடல்கள் இராக் அரசு அதிகாரிகளின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டன. இராக்கின் மொசூல் நகருக்கு வடமேற்கே உள்ள படோஷ் என்ற கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் 39 இந்தியர்களின் உடல்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அவர்களின் உடல்கள் மரபணுச் சோதனைக்காக இராக் தலைநகர் பாக்தாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அந்தச் சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் இறந்து விட்டது தொடர்பான ஆதாரத்தை அவையில் சமர்ப்பித்தார். 

இறந்தவர்களில் 38 பேரின் உடல்கள் சோதனையில் 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு இந்தியரின் உடல், மரபணுச் சோதனையில் 70 சதவீதம் பொருந்துகிறது. இறந்த உடல்களை அடையாளம் காணவும் அவற்றை பாக்தாதுக்கு அனுப்பி வைக்கவும் உதவிய இராக் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உடல்களை சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வருவதற்காக நான் இராக் செல்ல உள்ளேன். 

இந்தியாவுக்கு உடல்கள் வந்ததும் அதே விமானத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 27 பேரின் உடல்கள் அமிர்தசரஸுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் 4 பேரின் உடல்கள் ஹிமாசலப் பிரதேசகம் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பிகாரைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் பாட்னாவுக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் கொல்கத்தாவுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

சுஷ்மா சுவராஜ் அறிக்கையை அவையில் சமர்ப்பித்தைத் தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் எழுந்து நின்று இராக்கில் கொல்லப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்காக சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு ஐக்கிய நாடுகள் சபைம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதிகளின், காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com