சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நினைத்து ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது: சசிகலா வாக்குமூலம் 

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நினைத்து ஜெயலலிதா அதிக மன அழுத்தத்தில் இருந்தால் இதுவே அவரது உடல்நிலை பாதிக்க காரணமானது
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நினைத்து ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது: சசிகலா வாக்குமூலம் 

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நினைத்து ஜெயலலிதா அதிக மன அழுத்தத்தில் இருந்தால் அதுவே அவரது உடல்நிலை பாதிக்க காரணமானது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு உடல்நலக்குறையால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதியன்று மரணமடைந்தார்.

அப்பல்லோவில் இருந்த 75 நாட்களும் யாரையுமே சசிகலா பார்க்க விடவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். இந்த ஆணையத்தில் ஆஜராகி பலரும் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா நேரில் ஆஜராகவில்லை அதற்கு பதிலாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

சசிகலா வாக்குமூலம் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை வழக்குரைஞர் அரவிந்த், விசாரணை ஆணையத்திடம் சீலிடப்பட்ட கவரில் அளித்தார். ஜெயலலிதாவிற்கு மன அழுத்தம் அவரது வாக்குமூலம் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தார். 

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகுமோ என்ற பதற்றத்தில் ஜெயலலிதா இருந்தார். தான் தண்டிக்கப்பட்டு விடுவோமா என்றும் வேதனையில் இருந்ததுடன் கடும் மன அழுத்தத்திலும் இருந்தார். அதுவே ஜெயலலிதாவின் உடல்நிலையை பாதித்தது என்று சசிகலா கூறியுள்ளார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த போதே ஜெயலலிதாவிற்கு மனதளவில் வேதனை அதிகரித்தது. ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்தது. விடுதலையாகி வந்த பின்னரும் பாதிப்பு தொடர்ந்தது. எனவேதான் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார் என்றும் சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மேலும், மாத்திரை சாப்பிட்ட ஜெ கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகும் ஜெயலலிதா உடல் பாதிக்கப்பட்டது. நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மாத்திரை சாப்பிட்டார். 19-ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது என்றும் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார். 

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com