பெரியார் சிலை உடைப்பு: மத்திய பாதுகாப்புப் படைவீரர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக மத்திய பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் கைது
பெரியார் சிலை உடைப்பு: மத்திய பாதுகாப்புப் படைவீரர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக மத்திய பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு முழு உருவ பெரியார் சிலை நிறுவப்பட்டது. அந்த சிலையை திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் சிலையின் தலைப்பகுதியை துண்டித்து அப்பகுதியில் வீசிச் சென்றனர்.

இத்தகவல் செவ்வாய்க்கிழமை காலை பரவியைதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திராவிடர் கழகம், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் அப்பகுதியில் திரண்டனர். சம்பவப் பகுதியில் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலீப் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.  சிலை சேதப்படுத்தப்பட்டதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் நேரில் பார்வையிட்டார்.

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆலங்குடியில் திமுக மாநில இலக்கிய அணிச்  செயலாளர் கவிதைப்பித்தன் தலைமையில், திராவிடர் கழகம்,  திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பாஜகவை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இச்சம்பவத்தால் ஆலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில், மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றுவதாகவும், குடிபோதையில் சிலையை உடைத்தாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com