சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஓரியண்டல் பல்கலைக்கழக துணைவேந்தரான
சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை

மதுரை: சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை குடும்ப நல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் ராமசாமி மீது அவரது மனைவி அளித்தப் புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஓரியண்டல் பல்கலைக்கழக துணைவேந்தரான ராமசாமியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் மதுரை புதுமாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்யபிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

அதில் ஓரியண்டல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்று கூறிக்கொள்ளும் ராமசாமி தன்னுடைய கணவர் என்றும், நீதிபதி என்று ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பெண் குழந்தை பிறந்த பிறகு தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும் கணவர் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் செல்வி, பாரதி ஆகியோர் வரதட்சிணை கொடுமை செய்வதாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2017- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். புகாருக்கு ஆதாரமாக ராமசாமியுடன் திருமணம் நடந்தபோது எடுத்த புகைப்படத்தையும் வழங்கினார்.

இந்நிலையில் சத்யபிரியா அளித்தப் புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சட்ட ஆலோசனை மையத்துக்கும் புகார் அனுப்பப்பட்டது. 

இதைத்தொடர்ந்து சத்யப்பிரியா புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கணவர் ராமசாமி, அவரது சகோதரிகள் செல்வி, பாரதி ஆகிய மூவர் மீதும் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார், 498(ஏ), 294(பி), 506(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். 

இதனிடையே கணவர் ராமசாமியின் 2வது திருமணத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் சத்திய பிரியா வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

வரும்  26-ஆம் தேதி சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், ராமசாமிக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதும், அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதால் சசிகலா புஷ்பாவின் மறுமணத்தில் சிக்கல் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com