முக்திநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை புகழ்மிக்க முக்திநாத் கோயிலுக்கு சென்று சாமி
முக்திநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

காத்மாண்டு: நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை புகழ்மிக்க முக்திநாத் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கடந்த 2014-இல் பிரதமராக பதவியேற்ற பிறகு நேபாளத்துக்கு 3-ஆவது முறையாக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை சென்றார்.

ஜனக்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஈஸ்வர் பொகாரல், ஜனக்பூர் மேயர் லால் கிஷ்ரோ ஷா உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். 

பின்னர், ஹிந்துகளின் புனித நகரமாகவும், சீதை பிறந்த இடமாக அறியப்படும் ஜனக்பூர் நகரிலுள்ள ஜானகி கோயிலுக்கு சென்றார். அங்கு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று பிரதமர் மோடி ஜானகி கோயிலில் வழிபட்டார். அந்த நகரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வரலாற்றுரீதியிலான தொடர்புகளை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

அத்துடன், ஜனக்பூரையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் மேம்படுத்துவதற்கு இந்தியா சார்பில் ரூ.100 கோடி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தனது பேச்சை தொடங்கும்போது, நேபாளி, மைதிலி ஆகிய மொழிகளில் மோடி சில வார்த்தைகள் பேசியதுடன், 'ஜெய் சீதா ராம்' என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கரவொலிகளை எழுப்பினர்.

அதன்பின்னர் ஜனக்பூர்- உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி இடையே நேரடி பேருந்துச் சேவையை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியும் கூட்டாக தொடங்கிவைத்தனர். ராமாயண அடிப்படையிலான ஆன்மீக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் இன்று காலை புகழ்பெற்ற முக்திநாத் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். கோயிலில் அமர்ந்து சிறிது நேரம் வழிபட்டார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் மோடி சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். மோடியின் வருகையையொட்டி கோயில் வளாகத்தில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

அதன்பின்னர் காத்மாண்டு திரும்பும் மோடி, பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார். இதையடுத்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் பேச உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com