பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: பெட்ரோல் ரூ.79.47க்கும், டீசல் ரூ.71.59க்கும் விற்பனை 

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: பெட்ரோல் ரூ.79.47க்கும், டீசல் ரூ.71.59க்கும் விற்பனை 

எட்டாவது நாளாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இன்று மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47க்கும்,

சென்னை: எட்டாவது நாளாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இன்று மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47க்கும், டீசல் ரூ.71.59க்கும் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக அதிகரித்துள்ளது. கர்நாடகத் தேர்தலுக்குப் பின் ஒருவாரமாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. 

சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 79.47 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.71.59 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.80 நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.55-ஆக இருந்தது. அதன் பிறகு, அதிகபட்சமாக, தற்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூறினார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, உள்ளூர் விற்பனை வரியைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தில்லியில் பெட்ரோல் விலை சற்று குறைவாகக் காணப்படுகிறது. தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.24-ஆக உள்ளது.

ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.47-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.78.91-ஆகவும், மும்பையில் ரூ.84.07-ஆகவும், ஹைதராபாதில் ரூ.80.76ஆகவும் அதிகரித்துள்ளது.

டீசல் விலையைப் பொருத்தவரை, சென்னையில் ஒரு லிட்டர் ரூ.71.59-ஆகவும், தில்லியில் ஒரு லிட்டர் ரூ.67.57-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.12-ஆகவும், மும்பையில் ரூ.71.94-ஆகவும், ஹைதராபாதில் ரூ.73.45-ஆகவும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com