துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் உடலை பதப்படுத்தி வைக்கும் உத்தரவை மாற்ற முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி

உடலை ஒப்படைக்கக்கூடாது என்ற உத்தரவில் மாற்றம் கோரி குடும்பத்தார் யாரும் வராத நிலையில் அரசு ஏன் விளக்கம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் உடலை பதப்படுத்தி வைக்கும் உத்தரவை மாற்ற முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பதப்படுத்தும் உத்தரவில் மாற்றம் முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியும், உடற்கூறு ஆய்வில் தனியார் மருத்தவரை அனுமதிக்க வேண்டும் என கோரி வழக்குரைஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், உயரிழந்தோரின் உடல்களை வரும் 30-ஆம் தேதி வரை பதப்படுத்தி பாதுகாத்து வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த உத்தரவில் மாற்றங்கள் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இதில், துப்பாக்கிச் சூட்டில் பலியோனோரின் உடல்களைக் கேட்டு அவர்களின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை வழங்கியுள்ளதாகவும். வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பிரேதப் பரிசோதனையும் நிறைவடைந்துவிட்டதால் உடல்களை ஒப்படைக்க அனுமதி வழங்கவும் கோரப்பட்டது.

அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சோமையாஜி, மரணத்திற்குப் பின்னர் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய உறவினர்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியதோடு, உடல்களை வழங்க உறவினர்கள் கோரியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசு தரப்பில் கட்டாயப்படுத்தி கடிதம் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியவர், குடும்பத்தினரையே கொன்று ஆதரவற்றோர்களாக மாற்றிய காவல்துறை அவர்களின் கண்ணியத்தைக் காக்கிறோம் என்று தெரிவிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், உடலை ஒப்படைக்கக்கூடாது என்ற உத்தரவில் மாற்றம் கோரி குடும்பத்தார் யாரும் வராத நிலையில் அரசு ஏன் விளக்கம் கேட்கிறது என கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உண்மை நிலையை பார்க்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து இவ்வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லை என கூறிய நீதிபதிகள், மறு உத்தரவு வரும்வரை உடற்கூறு ஆய்வு செய்த உடல்களைப் வரும் 30-ஆம் தேதி வரையிலும் உடலை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டனர். அரசின் மனுவுக்கு மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com