தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தம் அளிக்கிறது: தம்பிதுரை பேட்டி

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தம் அளிக்கிறது: தம்பிதுரை பேட்டி

கிருஷ்ணகிரி: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறுகையில், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று ஆலையை திறக்க அனுமதி பெற்றனர். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த ஆலையை மூட உத்தரவிட்டதாக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கூறினார்.

அவரது வழியில் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வேறு மாதிரியான ஒன்று. ஆகவேதான் தமிழக முதலிவர் அதற்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டதுடன் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடிக்கு அதிகாரிகள் முதலில் செல்வார்கள். அங்கு உள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு அமைச்சர்கள் சென்று அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இந்த துயர சம்பவம் எங்கள் எல்லோருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com