ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள
ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று காலை முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இன்று காலை 5.30 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனமான ஸ்டெர்லைட்டை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. அதை புதுப்பிப்பதற்கான ஸ்டெர்லைட்டின் விண்ணப்பத்தினை கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக் கூடாது என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில், கடந்த 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் செய்யப்பட்ட ஆய்வில், உற்பத்தி செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும், எனவே மின் இணைப்பு மற்றும் விநியோகத்தை துண்டிக்குமாறு சுற்றுச்சூழல் கூடுதல் தலைமைப் பொறியாளர் பரிந்துரை செய்தாகவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.

இதன் அடிப்படையில், நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட்டுக்கான மின் இணைப்பு மற்றும் வினியோகத்தை துண்டிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான ஆணை விவரம் ஸ்டெர்லைட் நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் மின்வினியோகத்தை துண்டிப்பதற்கான வேண்டுகோளுடன் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் நேற்றைய தேதியிட்ட இந்த ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com