அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதா ஜீவன் எம்.எல்.ஏ. சவால்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எனது பெயரில் லாரிகள் ஓடுகிறது என்ற குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயகுமார் நிரூபித்தால் பதவி விலக
அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதா ஜீவன் எம்.எல்.ஏ. சவால்

    
ஸ்டெர்லைட் ஆலைக்கு எனது பெயரில் லாரிகள் ஓடுகிறது என்ற குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயகுமார் நிரூபித்தால் பதவி விலக தயார் என்று திமுக எம்.எல்.ஏ., கீதா ஜீவன் சவால் விடுத்துள்ளார். 

தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணிக்கு தலைமை தாங்கும் திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவர் பெயரில் 600 லாரிகள் ஓடுவதாகவும், அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மருமகன் ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்று கூறியிருந்தார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ, ‘1996-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்க தொடங்கியபோது ‘எல் அண்டு டி’ நிறுவனத்துக்காக எனது மருமகன் ‘வெல்டிங் ராடு’ வேலைகள் செய்து கொடுத்ததார். 2002-ஆம் ஆண்டுக்கு பின்னர் எனது மருமகன் ‘எல் அண்டு டி’ ‘ஸ்டாக்கிஸ்டு’ உரிமையையே வேண்டாம் என்று விலக்கிக்கொண்டார்’ என்று கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தும், அதனை நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும் திமுக எம்.எல்.ஏ., கீதா ஜீவன் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயகுமார் பொய்யான தகவல்களை தெரிவித்திருக்கிறார். பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படியொரு ஆதாரம் இல்லாமல் அப்பட்டமான பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையில் நாங்கள் காண்டிராக்ட் எதுவும் எடுக்கவில்லை.

எங்கள் குடும்பத்தினருடைய லாரிகள் எதுவும் அங்கு ஓடவில்லை. திமுக எம்.எல்.ஏ.வான என் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெயகுமார் அப்பட்டமான தகவலை தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயகுமார் கூறிய கருத்தை நிரூபித்தால் நான் பதவி விலக தயார். உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com