தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது

தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனை போலீஸார் கைது செய்தனர். 
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனை போலீஸார் கைது செய்தனர். 

தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடயே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும்  பெரும்பாலான பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக கைது செய்யப்பட்டார். 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தியும், விழுப்புரம் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முற்றுகையிட்டும், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் தி. வேல்முருகன் தலைமையில், வந்தவர்கள் வாகனங்களில் வந்து முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் சுங்கச்சாவடிகளை உருட்டுக் கட்டை, கற்களைக் கொண்டு அடித்து நொறுக்கினர். அங்கிருந்த 12 கட்டணம் வசூலிக்கும் மையங்களில் இருந்த பொருள்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், விழுப்புரம் போலீஸார் இன்று தூத்துக்குடி சென்று மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வேல்முருகனை கைது செய்தனர். அப்போது, கடந்த மாதம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com