இலங்கை பாராளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயகப் பச்சைப் படுகொலை: மு.க.ஸ்டாலின்

“மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று
இலங்கை பாராளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயகப் பச்சைப் படுகொலை: மு.க.ஸ்டாலின்

“மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது. மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி - அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மாற்றி, வருகின்ற 14ஆம் தேதி புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் பாராளுமன்றத்தைக்  கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல - அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல்! தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது.

முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை அடியோடு நசுக்குவதிலும், இனப்படுகொலை - மனித உரிமை மீறல்கள் - சர்வதேச நெறிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும், தனது ஆட்சிக் காலம் முழுவதும் கங்கணம் கட்டிக் கொண்டு “ஹிட்லர்” போல் செயல்பட்ட ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்ட போது மத்திய அரசு அமைதி காத்தது. ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ - “இந்திய - இலங்கை” ஒப்பந்தப்படி கொண்டு வரப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் “13 ஆவது திருத்தத்தையும்” தாண்டி அதிக அதிகாரங்களை ஈழத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை எள்ளி நகையாடிய ராஜபக்சேவும் - அதிபர் சிறிசேனாவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது மத்திய பாஜக அரசு.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக “பலாத்காரத்தையும்” “படுகொலையையும்” கட்டவிழ்த்து விட்டு, இந்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போர் மோசடிகளுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டு கடுந்தண்டனைக்கு உட்படுத்தப்பட  வேண்டிய ராஜபக்சே, திட்டமிட்டு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை செயற்கையாக உருவாக்கியதையும் கண்டு கொள்ளாமல் மத்திய பா.ஜ.க. அரசு கண் மூடிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் மவுனம் இன்றைக்கு இலங்கை பாராளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது.

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக  இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடை பட்டு விட்டது. அதுமட்டுமின்றி தமிழர்கள் மீது திடீர் தேர்தலை, சிறிசேனா - ராஜபக்சே” சூழ்ச்சிக் கூட்டணி திணித்திருப்பதற்குக்  காரணமாக அமைந்து விட்டது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும் காணாமலும் தட்டிக் கேட்காமலும்  இருந்ததையும், தங்களின் உயிருக்கும், உரிமைகளுக்கும் ஆபத்து உருவாகிய நேரத்தில் கூட இந்திய அரசு இப்படி இனம் புரியாத மவுனம் காத்ததையும் பார்த்து ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் - ஏன் உலகத்தமிழர்களும் இன்றைக்கு அதிர்ச்சியுடன் உறைந்து போயிருக்கிறார்கள்.

ஆகவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் திரு நரேந்திரமோடி தாமதமாகவேனும் உணர வேண்டும் என்றும், இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com