நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் செல்வது ஏன்?: ராகுல் கேள்வி

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை முடிவடையாத நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு திடீர்
நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் செல்வது ஏன்?: ராகுல் கேள்வி

 
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை முடிவடையாத நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதில், 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வழங்குவது என்றும், எஞ்சிய 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை.

அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக கூட்டணி அரசு, பிரான்ஸிடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாகவும், பெரியளவில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மூன்று நாள் அரசு முறை பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்று அந்நாட்டு பாதுகாப்புதுறை அமைச்சரை புளோரன்ஸ் பார்லேவை சந்தித்து பேசுகிறார். அந்த பேச்சுவார்த்தையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

ஆனால், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை காங்கிரஸ் கண்டித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு திடீரென பயணம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன?,  ரஃபேல் விமான ஆலையை பார்வையிட வேண்டிய அவசர தேவை என்ன? என கேள்வி எழுப்பிய ராகுல், நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே நிர்மலா சீதாராமன் அவசரமாக பிரான்ஸ் சென்றுள்ளார். இந்திய அரசு விரும்புவதையே டசால்ட் நிறுவனம் கூறும்; ரஃபேல் போன்ற பெரிய ஒப்பந்தத்தை இழக்க விரும்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவரங்களை, மூடி முத்திரையிட்ட 3 தனித்தனி உறைகளில் வைத்து, வரும் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

இந்நிலையில், மீடியா பார்ட் பத்திரிகை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். பங்குதாரர் விவகாரத்தில் எங்களுக்கு எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com