பெட்ரோல்,  டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆட்டோ, வாடகை கார் கட்டணம் கடும் உயர்வு

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் காரணமாகக் கூறி, ஆட்டோ,  வாடகை கார் கட்டணங்கள் இரு மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
பெட்ரோல்,  டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆட்டோ, வாடகை கார் கட்டணம் கடும் உயர்வு

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் காரணமாகக் கூறி, ஆட்டோ,  வாடகை கார் கட்டணங்கள் இரு மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

பெட்ரோல்,  டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் இவற்றின் விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு லிட்டர் டீசல் ரூ.80.28-க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.09-க்கும், விரைவு ரக பெட்ரோல் (ஸ்பீடு) ரூ.89.93-க்கும் விற்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட முறைகளில் பெட்ரோல்,  டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டது. புதன்கிழமையும் 11 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. 

முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல்,  டீசல் விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள், லாரி, கார், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்டோ, வாடகை கார், வேன் கட்டணங்கள் விதிகளை மீறி பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் நகரில் மட்டும் சுமார் 2,000 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில்,  டீசல் ஆட்டோக்கள்தான் அதிகம். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து, சுமார் 10 சதவீதம் அளவில் விலை உயர்ந்துள்ளது. ஆனால், ஆட்டோ, வாடகைக் கார்களில் கட்டணம் 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி வசூலிப்பதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.  

ஆட்டோவில் குறைந்தபட்சம் கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட் நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என உயர்த்தியுள்ளனர். பழைய பேருந்து நிலையம் - புதிய பேருந்து நிலையம் இடையே சுமார் ஒரு கி.மீ. தொலைவு  பயணத்துக்கு ஏற்கெனவே ரூ.40 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.70 வரை வசூலிக்கின்றனர். அரை கி.மீ-க்கும்  குறைவான  தொலைவுக்கு முன்பு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.50,  ரூ.60 என இரு மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கின்றனர். 5 கி.மீ. தொலைவுள்ள கிராமப் பகுதிகளுக்கு  பழைய கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.150 முதல் ரூ.200 வரை வசூலிக்கின்றனர். 10 கிமீ தொலைவுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை வசூலிக்கின்றனர். 

இது குறித்து,  பொது நல அமைப்பினர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர்களின்றி தோராயமாகக் கட்டணம் வசூலிக்கின்றனர். முறையான கட்டண பட்டியல் கிடையாது.  ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே அதிகமாக இருந்த நிலையில், தற்போது பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் காரணமாகக் கூறி இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அவல நிலை உள்ளது.  

இதேபோல, கார், வேன்களுக்கு நாள் வாடகை,  கி.மீ. வாடகையில் குறைந்தபட்ச வாடகை தொகையை 50 சதவீதம் வரை உயர்த்தி விட்டனர். ஆட்டோ, கார், வேன் கட்டணங்களை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது வேதனையளிக்கிறது. ஆன்-லைனில் புக் செய்யப்படும் கால் டாக்சி கட்டணமும் ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் அனைத்திலும் மீட்டர்கள் பொருத்தும் வரை குறைந்தபட்சக் கட்டணத்தை அறிவித்து, அதிகுறித்த  பட்டியலை ஆட்டோக்களில் ஒட்ட வேண்டும்.  பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும். இது குறித்து, மாவட்ட நிர்வாகமும்,  வட்டாரப் போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com