அரசியல் அனல் பறக்கும் மோதல்: ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி; கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய மநீம கட்சி

கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணிகுழந்தை. அது வளா்ந்தால் தமிழகத்துக்கு ஆபத்து, தமிழக
அரசியல் அனல் பறக்கும் மோதல்: ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி; கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய மநீம கட்சி


பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசனும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய கட்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பால்வளத்துறை அமைச்சர் நாகா்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைத்தோ்தலை கண்டு அதிமுக அஞ்சவில்லை. திருப்பரங்குன்றம் இயற்கையாகவே அதிமுகவின் எஃகு கோட்டை, திருவாரூா் தொகுதியை பொறுத்தவரை திமுக தலைவா் கருணாநிதி இருந்த நிலை வேறு இன்றைய நிலை வேறு அங்கும் அதிமுகதான் வெற்றி பெறும். 2 தொகுதி இடைத்தோ்தலிலும் அதிமுகவின் இரட்டை இலைதான் வெற்றி பெறும்.

கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணிகுழந்தை. அது வளா்ந்தால் தமிழகத்துக்கு ஆபத்து, தமிழக ‘மக்களுக்கு ஆபத்து, கமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் புரியவில்லை. அவருடன் இருப்பவா்களுக்கும் புரியவில்லை.

எம்ஜிஆா் குடிசை வாழ் மக்களோடு இருந்து மாளிகையை கண்டவர், ஆனால், கமல்ஹாசனோ மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகா் போல் கமல் நாடகம் நடத்துகிறா். அவா் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராக நடிக்கலாம். ஆனால் அவர் நாடகம் தோ்தலுக்கு ஒத்து வராது. விஸ்வரூபம் படத்தை திரையிடக்கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், படத்தை திரையிட முடியாத ஒரு சூழல் வந்த போது இந்த சின்ன பிரச்னைக்காக நாட்டை விட்டே ஓடிப் போகிறேன் என்று கூறியவா் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுவார். 

ரஜினிகாந்தை பொறுத்தவரை அவா் நியாயமாக பேசக்கூடியவா், உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யமாட்டார், ஆன்மீகவாதி. ஆனால் கமல் வாழ்ந்து வந்த வாழ்க்கை பாதையே தவறு. 

தமிழகத்தின் 50 ஆண்டு கால வளா்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் திராவிடக் கட்சிகள்தான் பெரும்பங்காற்றியுள்ளன. திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தை ஆள முடியுமே தவிர அதை தவிர்த்து இன்னொரு கட்சிக்கு வாய்ப்பே இல்லை என்றார். 

இது குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது அவர் கருத்து, தாழ்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உயர்ந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். இந்த சோகம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொருந்தும். கருக்கலைப்பு பற்றியெல்லாம் அவர் பேசுவதை பெண்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள், அதை பெண்கள் ரசிக்க மாட்டார்கள். எப்படி பாலில் கலப்படம் செய்தால் சுவைக்காதோ அதே போன்றுதான் இதுவும் என்றார். 

மேலும், கமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அமைச்சர் கூறியிருப்பது குறிந்து கேட்டதற்கு, அவருக்கு ஆயிரம் சந்தேகம் உண்டு. அவரே ஒரு தீய சக்திதான் என பதிலளித்தார். 

மேலும், இந்திரா காந்தி உள்பட பலர் அதிகாரத்துக்கு வந்து இருக்கிறார்கள். பெண்கள் அதிகாரத்திற்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. ஆனால், பெண்கள் பதற்றமான சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் புகார்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் இருந்துதான் வருகிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் இன்னும் தைரியமானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ள முடியாது. காந்தியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை. நாம் தான் மாற வேண்டும். மாணவர்களின் கைகளில் தான் எதிர்காலம் இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் தமிழகத்திற்கான புரட்சியில் மாணவர்கள் பங்கு பெற வேண்டும் என்றார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் - கமலும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com