செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கார்கள், இருசக்கர


செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், ஓம் காளி விநாயகர் கமிட்டியின் சார்பில் முதல் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக ஊர்வலமாக ஏராளமான ஆண்களும், பெண்களும் பல்வேறு பகுதிகள் வழியாக எடுத்து வந்தனர். செங்கோட்டை மேலூரில் உள்ள கீழபஜார் வழியாக சிலையை கொண்டு வந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, ஊர்வலம் அமைதியாக செல்ல அறிவுறுத்தினர். அதன்படி ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கல் மற்றும் மண்ணை எடுத்து வீசியதில் விநாயகர் சிலை சேதம் அடைந்தது.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கிடையே, செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, செங்கோட்டை வட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது.

தொடர்ந்து மாலை 4 மணியளவில் விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்கிட ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வண்டிமலைச்சி அம்மன் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. செங்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 30 விநாயகர் சிலைகளையும் குண்டாற்றில் கரைப்பதற்காக வண்டிமலைச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டன. மேலூர் கீழ பஜார் வழியாக வரும்போது திடீரென அப்பகுதியில் மறைந்திருந்த சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

உடனே போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர், காந்தி சிலை நான்கு முக்கு அருகே வரும்போது திடீரென பெரிய அளவிலான கற்கள் வந்து விழுந்தன. ஊர்வலப் பகுதியில் நின்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர், அதிர்ஷ்டவசமாக கல்வீச்சில் தப்பினார். 

வீசப்பட்ட கற்களால் ஒரு போலீஸ் வாகனம் மற்றும் தனியார் சூப்பர் மார்க்கெட் கடை கண்ணாடி சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பின்பு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு செங்கோட்டை குண்டாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதையடுத்து 144 தடை உத்தரவு இன்று சனிக்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், செங்கோட்டை, தென்காசி, ஆகிய வட்டங்களில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட காவல்துறை அதிகாரி அறிவித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 22-ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் எனக்கூறினார்.  விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான பிரச்சனையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com