இலவசமாக எங்காவது கச்சா எண்ணெய் கிடைக்குமா என்று தேடுங்கள்: ப.சிதம்பரம் சாடல் 

பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறைக்கப்படும் என பேசிய பாஜக தேசிய தலைவர் அமித ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து
இலவசமாக எங்காவது கச்சா எண்ணெய் கிடைக்குமா என்று தேடுங்கள்: ப.சிதம்பரம் சாடல் 


புதுதில்லி: பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறைக்கப்படும் என பேசிய பாஜக தேசிய தலைவர் அமித ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு இலவசமாக எங்காவது கச்சா எண்ணெய் கிடைக்குமா என்று தேடுங்கள் என சாடியுள்ளார். 

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், பெட்ரோல், டீசல்விலை குறைப்பு குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதுகுறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித் ஷா, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றை கண்டு மத்திய அரசும், பாஜகவும் கவலையடைந்துள்ளன. உலக அளவில் நடைபெறும் சில நிகழ்வுகளே, இதற்கு காரணமாகும். அதாவது, அமெரிக்கா, சீனா இடையே நடைபெறும் வர்த்தக போர், அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்னைகளே பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும்.

விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்த விவகாரத்துக்கு குறுகிய காலத்தில் மத்திய அரசு தீர்வை கண்டுபிடித்து, வெளியிடும்.

 பிற நாடுகளின் செலாவணிகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு குறைவுதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என குற்றம்சாட்டினார் அமித் ஷா.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பாஜக தலைவரோ பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கிறார். அப்படியானால் கச்சா எண்ணெய் எங்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற இடத்தை பாஜக தீவிரமாகத் தேடிக்கொண்டு இருக்கிறது.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தேர்தல் சமயத்தில் புழங்கும் கருப்பு பணத்தால் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையரின் அறிக்கையை சுட்டிக்காட்டியவர், மத்திய அரசு ஒழித்து விட்டதாக கூறும் கருப்பு பணம் எப்படி வந்தது? புதிய ரூ.2000 நோட்டுகள் எங்கிருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.63 ஆகவும், மும்பையில் ரூ.89.01 ஆகவும் இருந்தது. தில்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.54 ஆகவும், மும்பையில் ரூ.78.07 ஆகவும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com