மின்னுற்பத்தி விவகாரத்தில் பொய்கள் அனைத்தும் பல் இளிக்கத் தொடங்கியுள்ளன: ராமதாஸ் புகார்

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக கூறிய பொய்கள் அனைத்தும் பல் இளிக்கத் தொடங்கியுள்ளன என
மின்னுற்பத்தி விவகாரத்தில் பொய்கள் அனைத்தும் பல் இளிக்கத் தொடங்கியுள்ளன: ராமதாஸ் புகார்


சென்னை: தமிழ்நாட்டில் மின்வெட்டை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து 1500 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாகவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக கூறிய பொய்கள் அனைத்தும் பல் இளிக்கத் தொடங்கியுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தமிழ்நாட்டில் மின்னுற்பத்தி குறைந்து வருவதை சமாளிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 1500 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.

நிலுவையிலுள்ள மின்திட்டங்களை செயல்படுத்தாமல், மின் தேவைக்காக தனியார் நிறுவனங்களிடமும் மத்திய அரசிடமும், கையேந்தும் நிலையிலேயே தமிழகத்தை திராவிடக் கட்சிகள் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

2007-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கடுமையான மின்பற்றாக்குறையை சந்தித்து வந்தது. 2015-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் தமிழகத்தின் மின்வெட்டு ஓரளவு குறைந்தது. 2016-ஆம் ஆண்டில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி விட்டது என்று ஜெயலலிதா அரசு பெருமிதம் தெரிவித்தது.

2016-17 -ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 10,380 கோடி யூனிட்டுகள் என்றும், ஆனால், 11,545 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்படுவதால் 1,165 கோடி யூனிட்டுகள் மின்சாரம் மிகையாக இருக்கும் என்றும் அப்போது தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.

இரு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மொத்த மின்தேவையை விட 10 சதவீதம் அளவுக்கு உபரி மின்சாரம் உற்பத்தி செய்ததாக கூறி வந்த மின்சார வாரியம், இப்போது தமிழகத்தின் மின் தேவையை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோருவது ஏன்? இதை அறிந்து கொள்ள தமிழகத்தின் மின் நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை 15,440 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மாலை 6.30 மணி நிலவரப்படி தமிழகத்தின் மின் தேவை 14,037 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், இதில் 5026 மெகாவாட் மட்டுமே தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்தத் தயாரிப்பு ஆகும்.

மீதமுள்ள 9,011 மெகாவாட் மின்சாரம் மத்தியத் தொகுப்பிலிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தான் வாங்கப்படுகிறது. இதில் மத்தியத் தொகுப்பிலிருந்து 3726 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் நிலையில், 5285 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து தான் வாங்கப்படுகிறது.

தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தில் 1583 மெகாவாட் காற்றாலை மின்சாரம் ஆகும். காற்றாலை மின்னுற்பத்தி படிப்படியாக குறைந்து வருவதால் தான், அதை சமாளிக்க தனியாரிடமிருந்து 1500 மெகாவாட் அனல் மின்சாரத்தை வாங்க அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது.

தமிழ்நாடு எந்தக் காலத்திலும் மின்மிகை மாநிலமாக இருந்ததில்லை; மின் பற்றாக்குறை மாநிலமாகத் தான் நீடித்து வருகிறது என்பது இதிலிருந்து உறுதியாகிறது. தமிழகத்தின் மொத்த மின்தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே தமிழ்நாடு மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள சுமார் 10,000 மெகாவாட் மின்சாரம் மத்தியத் தொகுப்பிலிருந்தும், தனியாரிடமிருந்தும் தான் வாங்கப்படுகிறது.

இந்த உண்மையை மறைத்து விட்டு தான் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக ஜெயலலிதாவில் தொடங்கி இப்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி வரை அனைத்து முதல்வர்களும் பொய்களை கட்டவிழ்த்து விட்டு வந்தனர். இப்போது அந்த பொய்கள் அனைத்தும் பல் இளிக்கத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தை மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளுக்கு இல்லவே இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தின் மின்தேவை சுமார் 5,000 மெகாவாட்டில் இருந்து 15,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் 1800 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இதே காலத்தில் தமிழகத்தில் தனியார் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் 10,000 மெகாவாட் திறன் கொண்ட மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு எதையும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் எண்ணூரில் 1320 மெகாவாட் திறன் கொண்ட சிறப்பு பொருளாதாரத் திட்ட அனல் மின்நிலையம், 660 மெகாவாட் எண்ணூர் விரிவாக்கத் திட்டம், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் மாற்று அனல் மின்நிலையம், 800 மெகாவாட் வடசென்னை அனல் மின் நிலையம், 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின்நிலையம், உடன்குடியில் தலா 1320 மெகாவாட் என மொத்தம் 3960 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் நிலையங்கள், செய்யூர் மற்றும் கடலாடியில் தலா 4,000 மெகாவாட் என மொத்தம் 8000 மெகாவாட் திறன் கொண்ட 2 அதி உயர் அனல் மின் திட்டங்கள் என 16,960 மெகாவாட் மின்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 660 மெகாவாட் எண்ணூர் விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. இதுதான் அதிமுக அரசின் சாதனை.

மின்திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புகள் இருந்தும் அதை திராவிடக் கட்சிகளின் அரசுகள் பயன்படுத்திக் கொள்ளாததற்கு காரணம், மின்வெட்டு மக்களுக்கு எரிச்சலானதாக இருந்தாலும், ஆட்சியாளர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருப்பது தான். மின்சாரப் பற்றாக்குறை நிலவும் போது, அதை பயன்படுத்தி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதில் ஆட்சியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.48 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு ஊழல் செய்வதற்காகவே திராவிடக் கட்சிகள் மின்திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றன.

முன்னணி மாநிலம் என்று கூறப்படும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது என்பது பெரும் அவமானம் ஆகும். இந்நிலையை மாற்றி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற வேண்டியது அவசியமாகும். அதற்காக, நிலுவையில் உள்ள மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த பினாமி ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com