தொழிற்பயிற்சியில் சேர மாணவர்களிடையே ஆர்வமில்லை: 23 சதவீத இடங்கள் காலி

தேனி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கை குறைந்து, பல்வேறு பிரிவுகளில் 23 சதவீதம் இடங்கள்


தேனி: தேனி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கை குறைந்து, பல்வேறு பிரிவுகளில் 23 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளன.

மாவட்டத்தில் தேனி, வீரபாண்டி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும், தேனி, பெரியகுளம், கம்பம் ஆகிய இடங்களில் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம், மகளிர் திட்டம் ஆகியவற்றின் சார்பிலும் தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

தொழிற் பயிற்சி நிலையங்களில் மெக்கானிக், பிட்டர், கணினி இயக்குதல், வெல்டிங், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 12 தொழிற் பிரிவுகளில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு மற்றும் 2 ஆண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

மாவட்டத்தில் உள்ள 3 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களிலும் மொத்தம் 739 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர். ஆனால், இந்த ஆண்டு 3 கட்ட கலந்தாய்வு நடத்தியும் 572 மாணவ, மாணவிகள் மட்டுமே தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்துள்ளனர். மொத்தம் 167 இடங்கள் காலியாக உள்ளன. இது 23 சதவீதம். தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன.

தேனி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து பின் தங்கியுள்ளதால், தொழிற் பயிற்சி படிப்பு படித்தவர்களுக்கு உள்ளூர்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.   தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சம்மந்தப்பட்ட தொழிற் பயிற்சி நிலையம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, வழிகாட்டப்படுகிறது.

ஆனால், தேனியில் இருந்து கோவை, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்த சம்பளம், உணவு மற்றும் இருப்பிடம் ஆகிய பிரச்னைகளால் வேலையை தொடர முடியாமல் திரும்பி விடுகின்றனர். மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் அரசு சார்பில் தொழிற் பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்,  இந்தத் தொழிற்பேட்டைகளில் ஒரு சில உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 

மாவட்டத்தில் குடிசைத் தொழில்கள் தவிர பெரிய அளவிலான தொழிற் கூடங்கள் எதுவும் இல்லாததால், தொழிற் பயிற்சி படிப்பு முடித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை.

 எனவே, தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மாவட்டத்தில் புதிதாக தொழிற் கூடங்கள் அமைக்கவும், அரசு தொழிற் பேட்டைகளில் உற்பத்தி தொழில் தொடங்குவோருக்கு முன்னுரிமை அளிக்கவும், நலிவடைந்த தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com