நான் எங்கும் ஓடி ஒளியவில்லை வளசரவாக்கம் வீட்டில் தான் இருக்கிறேன்: கருணாஸ் பேட்டி

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் இருக்கிறேன் என கருணாஸ் எம்.எல்.ஏ கூறி உள்ளார்.
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை வளசரவாக்கம் வீட்டில் தான் இருக்கிறேன்: கருணாஸ் பேட்டி


சென்னை: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் இருக்கிறேன் என கருணாஸ் எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இப்பேச்சு கடந்த இரு நாள்களாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து போலீஸாரும், கருணாஸ் பேச்சு குறித்து விசாரணை செய்து வந்தனர். இதில் கருணாஸ் அந்தப் போராட்டத்தில், அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டதாம்.

இதையடுத்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் நடிகர் கருணாஸ் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் நடவடிக்கை எடுக்கலாம் என சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் கருணாஸ் மீது கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கருணாஸை 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் இருக்கிறேன் என தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். 

கருணாஸ் மீது சில அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் தனித்தனியாக புகார் அளித்து வருவதால், அந்தப் புகார்களின் அடிப்படையிலும் வழக்குப் பதிவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com