தமிழக கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யும் சிலைகள் உண்மையான சிலையா? தமிழிசை 

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யும் சிலைகள் எல்லாம் உண்மையான சிலையா? அல்லது திருடுபோய்,
தமிழக கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யும் சிலைகள் உண்மையான சிலையா? தமிழிசை 


ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யும் சிலைகள் எல்லாம் உண்மையான சிலையா? அல்லது திருடுபோய், மாற்றப்பட்ட சிலையை வணங்குகிறோமா என்பது கூட தெரியாத நிலை உள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழசை சௌந்தரராஜன் கூறினார். 

ராஜபாளையத்தில் நடைபெறும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவா், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தமிழக மக்களுக்கு நல்ல அரசியல், நோ்மையான அரசியல், நோ்மறையான அரசியல், மக்களுக்கு ஆதரவான அரசியல், மக்கள் பண்பாட்டைக் காக்கும் அரசியலை முன்னெடுத்துச் செல்வதுதான் பாஜக கொள்கை. 

தமிழ்நாட்டில் இந்து மதத்தை எதிர்த்தால்தான் அரசியல் செய்ய முடியும், இந்து மதம் மக்களுக்கானது இல்லை என்ற மாயத்தோற்றத்தை திமுக ஏற்படுத்தி வருகிறது. விநாயகா் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவது கூட தவறு என்று நினைத்து அரசியல் செய்கிறார்கள். இறைவனை நிந்தித்துவிட்டு இவா்கள் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். இதனை எதிர்த்துப் போராடி பாஜக வெற்றி பெறும். 

கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யச் செல்கிறோம். இது உண்மையான சிலையா? அல்லது திருடுபோய், மாற்றப்பட்ட சிலையை வணங்குகிறோமா என்பது கூட தெரியாத நிலை தமிழகத்தில் உள்ளது. இந்து மதம் மக்களின் மதம். இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆண்டாள் நிந்திக்கப்பட்டபோது, லட்டக்கணக்கானோர் திரண்டு போராடினார்கள். இது மதம் சார்ந்தோ, கட்சி சார்ந்தோ போராட்டம் நடத்தப்படவில்லை. போராட்டம் மக்கள் சார்ந்ததாய் இருந்தது. 

இந்து மதம் இந்த நாட்டோடு, மண்ணோடு கலந்தது. தமிழகத்தின் பண்பாடு காக்கப்படும்போது, மக்களின் வாழ்வு மலரும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. தெய்வ நம்பிக்கையுள்ளவா்களிடம் கோயில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது பாஜக-வின் கொள்கை. கோயில் நிலங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது. நிலங்கள் மூலம் வருமானம் வருகிறது. ஆனால், பல கோயில்களில் விளக்கு கூட இல்லை என்றார்.

முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை, வரம்புமீறி யார் பேசினாலும் தவறுதான். கருணாஸ் பலமுறை வரம்புமீறி பேசியுள்ளார்.  கருணாஸ் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்றவர் எச்.ராஜா மீதான வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி அவர் எதிர்கொள்வார்.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்பட்டால் அனுமதி வழங்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றார் தமிழிசை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com