தலாய் லாமாவின் அருணாச்சலப் பிரதேச வருகைக்கு புது அரசியல் வண்ணம் அடிக்கத் தேவையில்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி!

அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் தவாங் மிகப் புனிதமான பெளத்த மடாலயங்கள் பலவற்றுள் முதன்மையானதாகக் கருதப் படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் ஆறாம் தலாய் லாமா பிறந்தது இங்கு தான் எனக் கருதப் படுகிறது.
தலாய் லாமாவின் அருணாச்சலப் பிரதேச வருகைக்கு புது அரசியல் வண்ணம் அடிக்கத் தேவையில்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி!

திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா வட கிழக்கு மாநிலங்களுக்கு விஜயம் செய்வது புதிதான விசயமில்லை. இதுவரை 5 முறை அவர் வட கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்து அங்கு மக்களைச் சந்தித்திருக்கிறார், தற்போதைய அருணாச்சலப் பிரதேச பயணம், அம்மாநிலத்தைப் பொறுத்தவரை அவரது 6 வது விஜயம். எனவே இதற்கு புதிய அரசியல் வண்ணங்கள் அடித்து அவரது வருகையை சீனா எதிர்க்கத் தேவையில்லை என இந்தியா அறிவித்திருந்தது. இதையொட்டி சீனாவின் எதிர்ப்பையும் மீறி ஏப்ரல் 5 ஆம் தேதி தலாய் லாமா அருணாச்சலப் பிரதேசம் செல்லவிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை தலாய் லாமா பெருமதிப்பிற்குரிய மதத் தலைவர், திபெத்திய மக்களால் மட்டுமல்ல இந்திய மக்களாலும் விரும்பிப் போற்றப்படும் மேன்மை பொருந்திய பெளத்தத் துறவி. அவரை இந்திய மக்களும் விரும்புவதால் மரியாதைக்குரிய மதத்தலைவராகவே இந்திய அரசு அவரை கருதும் என இந்திய வெளியுறவுத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதம் மற்றும் ஆன்மீக ரீதியிலான அவரது இந்தியப் பயணங்களுக்கு சீனா; எல்லைப்புற அரசியல் காரணங்களைக் கொண்டு வண்ணம் தீட்டத் தேவையில்லை என்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக, இந்திய சீன எல்லையை ஒட்டிய பிரச்சினைக்குரிய எல்லைப்புற இந்திய மாநிலங்களுக்கு தலாய் லாமா வருகை தர இந்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என சீனா எச்சரித்திருந்தது. அப்படி இந்தியா அனுமதி அளிக்குமாயின் இந்திய சீன நட்புறவில் விரிசல் விழும் எனவும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து சீன அரசின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை  வெளியிட்டிருந்தார். 

இதையொட்டி தற்போது சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரான ஜென் சுவாங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தலாய் லாமா நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அவர் சுதந்திரமாக நடமாட இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறித்து சீனா தொடர்ந்து மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தலாய் லாமாவின் இது போன்ற திடீர் பயணத் திட்டங்களை, சீனா கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் உள்ளூர் நாளிதழ் ஒன்றிற்கு செய்தி அளித்துள்ளார்.

இந்திய, சீன எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்த வரை, எல்லைப்புறத்தில் நிலவும் பதட்ட நிலை பற்றி இந்தியா நன்கறியும். இந்த நிலையில் சீனா தடை விதித்துள்ள தலாய் லாமா போன்ற ஒரு மதத் தலைவரை இந்தியா அந்தப் பிரதேசங்களில் உலவ அனுமதி அளிப்பது, எந்த விதத்திலும் இந்திய சீன நல்லுறவுக்கு நன்மை செய்யப்போவதில்லை எனவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனக்குச் சொந்தமான பகுதி என உரிமை கொண்டாடி வரும் நிலையில், தலாய் லாமா அதை தெற்கு திபெத் என்று கூறி பிரிவினைவாத நடவடிக்கைக்களைத் தூண்டுவதால் சீனாவைப் பொறுத்தவரை தலாய் லாமா பிரிவினை வாத சக்தியாகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில் தலாய் லாமாவின் அதிகாரப் பூர்வ இணைய தளம் வெளியிட்டிருக்கும் அவரது பயணக் குறிப்புச் செய்திகளில், இதுவரை தலாய் லாமா அருணாச்சலப் பிரதேசத்துக்கு 6 முறை பயணப் பட்டிருப்பதாகவும். இனி நிகழப்போவது அவரது 7 வது வருகை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலாய் லாமா 1983 ல் ஒருமுறை, 1996 ல் ஒரு முறை, 1997 ல் ஒருமுறை, 2003 ஆம் ஆண்டில் இருமுறை, மற்றும் 2009 ல் ஒருமுறை என இது வரை 6 முறை அம்மாநிலத்துக்கு வருகை தந்திருக்கிறார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 5 முதல் 7 வரை தவாங், யிகா சூயிங்கில் மத போதனை வகுப்புகளை முடித்து விட்டு, ஏப்ரல் 10 அன்று திராங்கில் உள்ள பிரசித்தி பெற்ற தப்சுங் டார்ஜிலிங் பெளத்த மடாலயத்தில் தனது போதனைகளை நிகழ்த்தவிருக்கிறாரம் தலாய் லாமா. ஏப்ரல் 11 அன்று பொம்டிலா பெளத்த பூங்காவிற்கு வருகை தரும் தலாய் லாமா, அதற்கடுத்த நாளான ஏப்ரல் 12 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரில் உரையாற்றவிருக்கிறார் என அவரது அதிகார பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் தவாங் மிகப் புனிதமான பெளத்த மடாலயங்கள் பலவற்றுள் முதன்மையானதாகக் கருதப் படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் ஆறாம் தலாய் லாமா பிறந்தது இங்கு தான் எனக் கருதப் படுகிறது.

1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தற்போதைய 14 ஆம் தலாய்லாமா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் தர்மசாலாவிற்கு அடைக்கலம் தேடி வந்து வாழ்ந்து வருகிறார்.

மார்ச் 31 அன்று அஸ்ஸாமில் நடைபெற்ற ‘நமாமி பிரம்ம புத்திரா ஆறு’ எனும் புனல் விழாவுக்காக அங்கு வருகை புரிந்த தலாய்லாமா, தனது அருணாச்சலப் பிரதேச சுற்றுப் பிரயாணத்தை முடித்த பிறகே இருப்பிடம் திரும்பவிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com