மாடித்தோட்டத்தில் மரிஜூவானா போதைச் செடி பயிரிட்டு வளர்த்த இளைஞர் கைது! 

தமிழ்நாட்டு சீதோஷ்ணத்தில் வளர உகந்ததற்ற இந்த மரிஜூவானா செடிகள், விழுப்புரத்தில் ஒரு பாழடைந்த மொட்டை மாடித் தோட்டத்தில் எப்படி வளர்ந்தது? என்பதில் சோதனைக்கு வந்தவர்களுக்கு பெரும் வியப்பு!
மாடித்தோட்டத்தில் மரிஜூவானா போதைச் செடி பயிரிட்டு வளர்த்த இளைஞர் கைது! 

மொட்டை மாடித் தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்கச் சொல்லி போதித்தது ‘36 வயதினிலே’ திரைப்படம். அதைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ என்னவோ இந்த விழுப்புரம் இளைஞர் கண்ணன். வீட்டுக்கு கடைக்குட்டியான கண்ணன் ஒரு மெக்கானிக். டி.வி. மிக்ஸி. ஃபேன் பழுது பார்க்கும் வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர். கண்ணனின் உடன் பிறந்தவர்கள் சொத்துத் தகராறில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த கண்ணனுக்கு பங்கு தராமல் ஏமாற்ற, அது கண்ணனுக்கு மிகப் பெரிய மனச்சுமையாக மாறியது, இதனால் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான கண்ணன் நாளடைவில் தனது மோசமான நடத்தையால் அக்கம் பக்கத்தவரின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார். உடன் பிறந்தவர்கள் புறக்கணிக்க, உறவினர் வெறுக்க குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக போதை வஸ்துக்களுக்கு தடம் மாறியது. இவரது மோசமான செய்கைகளால் சிரமத்துக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் கண்ணனைப் புறக்கணிக்க வருமானம் தந்த வேலையிலும் சிரம தசை. 

குடிக்க பணமின்றித் திண்டாடிய கண்ணன் சிக்கன நடவடிக்கையாக தனக்குக் கிடைத்த சில மரிஜூவானா போதை விதைகளை, தனது வீட்டின் சிதிலமடைந்த மொட்டை மாடியில் நட்டு வளர்க்கத் தொடங்கி இருக்கிறார். கடந்த 8 மாதங்களாக நிகழ்ந்த வளர்ச்சியில் அவ்வப்போது கண்ணன் மரிஜூவானாவை உட்கொண்டு நடு இரவில் காலில் சலங்கை கட்டு பரதம் ஆடுவதாக அலப்பறை கொடுத்த நிகழ்வுகளும் அரங்கேறினவாம். இதனால் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளான அக்கம் பக்கத்தார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே;  விழுப்புரம் காவல் ஆய்வாளர் ஜெரால்டு தலைமையிலான குழு ஒன்று வெள்ளி அன்று கண்ணன் வீட்டை சுற்றி வளைத்தது. காவல்துறை மூலமாக விசயம் நார்கோடிக்ஸ் இண்டெலிஜென்ஸ் பீரோ அமைப்பிற்குத் தெரிவிக்கப்பட்டு அவர்களும் கண்ணன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கண்ணன் வீட்டிலிருந்து சுமார் 50 மரிஜூவானா செடிகள் கைப்பற்றப் பட்டுள்ளன எனவும், அவற்றின் எடை 2.4 கிலோகிராம். கருப்புச் சந்தையில் அதன் இன்றைய மதிப்பு சுமார் 24,000 ரூபாய்கள் எனவும் நார்கோடிக்ஸ் இண்டெலிஜென்ஸ் பீரோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டு சீதோஷ்ணத்தில் வளர உகந்ததற்ற இந்த மரிஜூவானா செடிகள், விழுப்புரத்தில் ஒரு பாழடைந்த மொட்டை மாடித் தோட்டத்தில் எப்படி வளர்ந்தது? என்பதில் சோதனைக்கு வந்தவர்களுக்கு பெரும் வியப்பு!

போதைச் செடிகளை வளர்த்த கண்ணன் இதுவரை அவற்றை விற்பனை செய்ததாகவோ, வேறு  யாரிடமும் பகிர்ந்து கொண்டதாகவோ தகவல்கள் இல்லை. தனது தனிப்பட்ட போதைத் தேவைகளுக்காக ஒரு மனிதன் தன் வீட்டு மொட்டைமாடியில் போதைச் செடிகளை தோட்டம் போட்டு வளர்த்தது இதுவே முதல் முறை எனக் கூறி சட்டத்துக்குப் புறம்பாக மாடித் தோட்டத்தில் மரிஜூவானா வளர்த்த குற்றத்துக்காக 47 வயது கண்ணனை கைது செய்திருக்கிறது விழுப்புரம் காவல்துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com