ஹைதராபாத் ஹுஸைன் சாகர் ஏரி புத்தர் சிலையை நிர்மாணித்த மகா சிற்பி பத்மஸ்ரீ கணபதி ஸ்தபதி மறைவு!

இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு என இரு அண்டை மாநிலங்களில் ஒரே பெயருடைய இரு வேறு ஸ்தபதிகள் ஒரே பெயரில் சிறப்புற்று இருந்தமையும், இந்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளமையும் அபூர்வமான ஒற்றுமைகள்!
ஹைதராபாத் ஹுஸைன் சாகர் ஏரி புத்தர் சிலையை நிர்மாணித்த மகா சிற்பி பத்மஸ்ரீ கணபதி ஸ்தபதி மறைவு!

ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா, ஆந்திரா எனப் பிளவுபடுவதற்கு முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது அன்றைய ஆந்திர முதல்வராக இருந்த என்டிஆர்- க்கு ஒரே கல்லால் ஆன 58 அடி உயர புத்தர் சிலையை ஹைதராபாத் ஹுஸைன் சாகர் ஏரியில் நிறுவ வேண்டும் என ஆசை வந்தது. உயரம் 58 அடி என்றால் சிலையின் எடையோ 350 டன்கள். முதல்வரின் மாபெரும் ஆசையை நனவாக்க நூற்றுக்கணக்கான சிற்ப வேலையாட்களும், துணை நிலைச் சிற்பிகளும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலைமை தாங்கி என்டிஆர் மெச்சும் படி மாபெரும் புத்த சிலையை நிர்மாணித்த பெருமைக்கு உரியவர் கணபதி ஸ்தபதி. 

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த கணபதி ஸ்தபதி ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் என் டி ஆர் ஆட்சியின் கீழ் அப்போதைய ஆந்திர மாநிலத்தின் தலைமை ஸ்தபதியாக இருந்து ஆற்றிய கலைப்பணிகள் எண்ணிலடங்காதவை.

ஆந்திராவில் நாகார்ஜுன சாகர் அணை கட்டப்பட்ட போது, அணைக்கு அடியில் தொல்லியல் பெருமை வாய்ந்த பழமையான கோயில்கள் பல காவு கொடுக்கப்பட இருந்தன. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் கோயில்களும் காப்பாற்றப்பட வேண்டும். அணையும் கட்டியாக வேண்டும். என்ன செய்வது என யோசிக்கையில் அப்போதும் ஆந்திர அரசுக்கு துணை நின்றது கணபதி ஸ்தபதியின் திறமை தான். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 48 கோயில்களின் எடை மிக்க தூண்கள் மற்றூம் பிரகாரங்களை அப்படியே தனித் தனியாக கழற்றி எடுத்தார் போல் பிரித்து எடுத்து பிற்காலத்தில் இத்தகைய இடைஞ்சல்கள் எதுவும் அண்டாத தூரத்தில் அழகாக பழையெ மெருகும், சிறப்பும் குன்றாமல் நிர்மாணித்துக் கொடுத்தாராம். கோயில்களை இடித்துப் பாழாக்காமல் அப்படியே பெயர்த்தெடுத்தார் போல திறமையாக மற்றொரு இடத்தில் நிர்மாணிப்பது என்பது மிகப்பெரிய சவால்! அதை சாதித்தவர் கணபதி ஸ்தபதி. 

அது மட்டுமல்ல; பத்ராச்சலத்தில் இருக்கும் கல்யாண மண்டபம், ராமாலயம், ஓரிருக்கை மணிமண்டபம், உள்ளிட்ட பிற சிற்ப வேலைப்பாடுகளும் கூட என்றென்றும் கணபதி ஸ்தபதியின் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் என்கிறார் தெலுங்கானா சுற்றுலாத்துறை செயலாளராக உள்ள பி. வெங்கடேஷன்.

அணை கட்டப்படும் போது 48 பழமை வாய்ந்த கோயில்களை காப்பாற்றித் தந்த தனித்திறமைக்காக 1990 ல் கணபதி ஸ்தபதிக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவித்தது இந்திய அரசு.

‘புத்தவனம் சிற்ப வேலைப்பாடுகளுக்காக கணபதி ஸ்தபதியிடம் தெலுங்கானா அரசு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கும்’ என புத்தவனம் புராஜெக்ட் சிறப்பு அதிகாரி மல்லேபல்லி லட்சுமய்யா ஸ்தபதிக்கான தனது அஞ்சலிச் குறிப்பில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்பு மிக்க தனது கலைப் பங்களிப்பைச் செய்த கணபதி ஸ்தபதி தமிழ்நாட்டுக்காரர் என்பது தமிழர்களுக்கான நமக்கெல்லாம் பெருமையே! 

தமிழ்நாட்டிலும் பிரசித்தி பெற்ற கணபதி ஸ்தபதி ஒருவர் இருந்தார். கன்யாகுமரியில் 133 அடி வள்ளுவர் சிலையை நிர்மாணித்தவர் அவர். இவர் பிறந்தது சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில்.

தமிழக அரசு சார்பில் பல்வேறு சிற்ப வேலைகளில் தனித்திறமைகளை காட்டி மெச்சுதலுக்குரியவரான இந்த கணபதி ஸ்தபதி 2011 ஆம் ஆண்டில் சென்னையில் தனது இல்லத்தில் உடல் நலமின்றி மரணம் அடைந்தார். இவரது கலைத்திறனைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது அளித்துச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு என இரு அண்டை மாநிலங்களில் ஒரே பெயருடைய இரு வேறு ஸ்தபதிகள் ஒரே பெயரில் சிறப்புற்று இருந்தமையும், இந்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளமையும் அபூர்வமான ஒற்றுமைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com