தூய்மை இந்தியா கழிப்பறைகள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழைகளுக்கா? பணமிருந்தும் மனம் பிடியாத பணக்கார ஏழைகளுக்கா?

திடீரெனப் பார்த்தால் கமலேஷின் ஒற்றை அறை வாடகை வீடுகள் கொண்ட கட்டிடத்தில் இப்போது தூய்மை இந்தியா திட்டத்துக்குச் சொந்தமான 13 கழிப்பறைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ளனவாம்.
தூய்மை இந்தியா கழிப்பறைகள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழைகளுக்கா? பணமிருந்தும் மனம் பிடியாத பணக்கார ஏழைகளுக்கா?

மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 13 கழிப்பறைகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டுள்ளதாம். விசயத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சுகாதாரத்திற்காக என்றால் நல்லது தானே என்று தான் தோன்றும். ஆனால் இந்த டாய்லட்டுகள் அனைத்தும் கட்டப்பட்டது சட்டீஸ்கரில் இருக்கும் ஒரு பணக்கார நிலச்சுவான்தாருக்குச் சொந்தமான வீட்டில் அவரது ஊழியர்களுக்காக என்றால் அதை சுகாதாரம் என்ற அடிப்படையில் எப்படி கண்டும் காணாமல் விட முடியும் என்கிறார்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்! நியாயம் தானே? பிரதம மந்திரியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இருக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் சுகாதாரத்தையும், வறுமையையும் மனதில் வைத்து தானே ஒழிய இப்படி பணக்காரர்கள் இலவசமாகவோ, குறைந்த செலவிலோ பயன்பெற அல்ல என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்.

ஆனால் சட்டீஸ்கர் மாநிலத் தலைநகரான ராய்பூரில் இருக்கிறது கிரோரிமால் நகர் பஞ்சாயத்து. இங்கு ஊரறிந்த நிலச் சுவான்தார் கமலேஷ் சாஹு. இவர் சமீபத்தில் தனக்குச் சொந்தமான செங்கல் கட்டிடத்தை இடித்து விட்டு அதை ஒற்றை அறைகள் கொண்ட பல வீடுகளாக மாற்றிக் கட்டினார். அந்த அறைகள் அனைத்தையும் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சட்டீஷ்கருக்கு வேலைக்கு வந்த கட்டிடக் கூலிகளுக்கு வாடகைக்கு விட்டார். ஆனால் இந்த கட்டிட கூலித் தொழிலாளிகளுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள் எதையும் கமலேஷ் சாஹு செய்து தரவில்லை. அவர்கள் தங்களது இயற்கை கடன்களைத் தீர்க்க திறந்தவெளி இடங்களையே இது வரை நம்பி இருந்தனர்.

ஆனால் திடீரெனப் பார்த்தால் கமலேஷின் ஒற்றை அறை வாடகை வீடுகள் கொண்ட கட்டிடத்தில் இப்போது தூய்மை இந்தியா திட்டத்துக்குச் சொந்தமான 13 கழிப்பறைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ளனவாம். அந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தப் போகும் அத்தனை பேருமே வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கூட கிரோரிமால் நகரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதோடு கமலேஷ் போன்ற பணக்காரர்களுக்கு எதற்கு மலிவு விலை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் கழிப்பறைகள்? அவர் பணம் செலவளித்து தனது தொழிலாளர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகளைச் செய்து கொண்டிருக்கலாமே? இது குறிப்பிட்ட கிராமப் பஞ்சாயத்தையும், அதன் பொது மக்களையும் ஏமாற்றும் முயற்சி. இதனால் நிஜமாகவே பயனடைய வேண்டிய ஏழை கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனும் ரீதியில் பிரச்சினை வெடித்திருக்கிறது.

இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த கமலேஷ், ஒரு நாள் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வந்த நபர் ஒருவர் எனது வீடுகளில் வாடகைக்குத் தங்கி இருந்தவர்களிடம், அவர்களது ஆதார் அட்டைகள் மற்றும் புகைப்படங்களை வாங்கிச் சென்றார். எந்த அடிப்படையில் எனது கட்டிட வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான கழிப்பறைகள் கட்டப்பட்டன என்பது குறித்து எனக்குத் தெரியாது என சந்தர்ப்பவாதியாகப் பதிலளித்து ஒதுங்கிக் கொண்டார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கேள்வி எழுப்புகையில்; தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டது தான் இந்த கழிப்பறைகள். சட்டப்படி கிராமப் பஞ்சாயத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என்பது விதி. தற்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள கட்டடத் தொழிலாளிகள் அனைவரும் வேறு, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் ராய்பூர் ஜிண்டால் ஸ்டீல் மற்றூம் பவர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏழைக் கூலித்தொழிலாளிகள் என்பதால் சுகாதாரத்தை மேம்படுத்டுஹ்ம் பொருட்டு அவர்களுக்கு இவ்வசதிகள் செய்து தரப்பட்டன எனக் குறிப்பிட்டார். 

ஆனால் இதைப் பற்றி பேசுகையில் சமூக ஆர்வலர்கள் கூறூம் குற்றச் சாட்டுகள் என்னவெனில்; மக்களுக்கு இன்னமும் இந்த திட்டம் மற்றும் இதன் பலன்களைப் பற்றிய போதிய ஞானமும், தெளிவும் இல்லை. அவர்களது அறியாமையப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரமட்டத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவாக இது போன்ற நலத்திட்டங்களை தாரை வார்த்து விடுகிறார்கள். என்றனர். இதைப் பற்றி ராய்பூர் மாவட்ட ஆட்சியர் அலர்மேல் மங்கையிடம் தெரிவித்த போது; அவர் ‘ மத்திய அரசின் த்ய்ய்மை இந்தியா திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக திட்டமிட்டு உருவாக்கப் பட்டது, இதில் இப்படியான சட்ட மீறல்களுக்கோ, அதிகார துஷ்பிரயோகங்களுக்கோ அனுமதி இல்லை. இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உண்மை அறிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

எது எப்படியோ... அரசின் தூய்மை இந்தியா திட்டம் உண்மையில் யாரைப் போய் சென்றடைகிறது என்பது தான் புரியவில்லை. உண்மையில் அது வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழைகளுக்கா? அல்லது பணமிருந்தும் மனம் பிடியாத பணக்கார ஏழைகளுக்கா? என்பது தான் புரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com