தர்ம யுத்தத்தின் நடுவே ஏட்டுச் சுரைக்காய் அரசியல்கறி சமைக்க உதவாதோ?!

இவர்களது தர்ம யுத்தம் எல்லாம் அவரவர் நலனுக்காக மட்டுமே தவிர தமிழக மக்களின் நலனுக்காக அல்ல! இதை ஜெ இறந்தது முதல் தொடர்ந்து அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்து வரும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார
தர்ம யுத்தத்தின் நடுவே ஏட்டுச் சுரைக்காய் அரசியல்கறி சமைக்க உதவாதோ?!

வெகு சாமர்த்தியமாகத் திட்டமிடப்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல், அதிகார நெடுங்கனவொன்று முனை முறிகிறதா?

அதிமுகவில் இருந்து நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் என டிடிவி தினகரன் பேட்டி அளிக்கிறார்.

அதிமுகவின் சூத்ரதாரி எனக் கருதப் பட்ட நடராஜனைப் பற்றிய பேச்சுக்கள் குறைந்து விட்டன. 

வி.கே. சசிகலா இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று நிரூபணம் ஆகி அதற்கான தண்டனையாகத் தான் அவர் சிறை சென்றிருக்கிறார். ஆனால் அதற்கு முன்னும் பின்னும் தான் தமிழக அரசியல் அரங்கில் எத்தனை, எத்தனை நாடகங்கள் அரங்கேறி விட்டன. இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து வரும் தமிழக மக்களை முட்டாள்களாக எண்ணிக் கொண்டு ஆளும் கட்சியின் இருபிரிவினரும் ஆடும் பகடையாட்டத்திற்கு இன்னும் ஓய்வில்லை. அத்தனைக்கும் ஒரே இலக்கு அந்த முதல்வர் நாற்காலி கனவு ஒன்று மட்டுமே! அமர வாய்ப்பு இருக்கிறது என எண்ணிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது முதல்வராகும் கனவு. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு இழந்த நாற்காலியை மீண்டும் அடையத் துடிக்கும் ஆசை, இந்நாள் முதல்வர் இபிஎஸ்ஸுக்கோ அடைந்த நாற்காலியை எப்பாடு பட்டாவது தக்கவைத்துக் கொள்ளும் ஆசை! இதற்கு நடுவில் 32 ஆண்டுகளாக ஜெ உடன் இருந்து அவரது சொந்தக் குடும்பமாகவும், வாரிசுகளாகவும் தங்களைக் காட்டிக் கொண்ட சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் கதை தான் ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவு வாடி இருந்த கொக்கு கதையாகி விட்டது. ஜெ இறப்பின் பின் சசிகலா கைக்கு முதல்வர் நாற்காலி எனும் உறு மீன் சிக்க வாய்ப்பிருந்த போதெல்லாம் அந்தக் குடும்பத்தின் மீது விழுந்திருந்த அழுத்தமான ஊழல் கறையும், அதிகார துஷ்பிரயோகக் கறையும் அதை ஒட்டிச் சென்று கெடுத்தது. 

ஒரு பக்கம் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றத் துடிக்கும் பாஜக. மறுபக்கம் மக்களின் வெறுப்புணர்வு, இதற்கு நடுவில் கோடாரிக் காம்பாக வளர்த்து விட்ட தங்களிடமே கூர் தீட்டிப் பார்க்க முயலும் சொந்தக் கட்சி எம்எல்ஏ, எம்பி க்களின் உள்ளடி வேலைகள் ஒரு பக்கம். அவற்றோடு கூட அதிகாரப் பகிர்வில் தங்களது பிரதானத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் உற்றார் உறவினர்களின் பிச்சுப் பிடுங்கல்கள் ஒரு பக்கம் என சசிகலாவுக்கு இன்று திரும்பிய திசையெங்கும் மனமொடிந்து போகச் செய்யும் அளவுக்கு பிரச்னைகள் மட்டுமே எட்டுத் திக்கிலும் கண் முன் நிழலாடுகின்றன. இவற்றை எல்லாம் முன்னைப் போல சமாளித்து  அவரால் மீள முடியுமா எனத் தெரியவில்லை. எதிர்த்துப் போராட வயது ஒரு தடை எனில் உடல்நலமும், மனநலமும் பின்னின்று மறிக்கும் பிற தடைகள். 

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்த இந்த ஆட்சிக்கு காலக்கெடு இன்னும் 4 ஆண்டுகள் முழுதாக இருக்கின்றன. இந்த முறை ஆட்சியமைக்க கிடைத்த பெரும்பான்மை பலத்தை இனியெப்போதும் அவர்களால் அடைய முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி! இந்த நிலையில் தற்போது அமைச்சராகவும், எம்எல்ஏக்களாகவும் பதவியிலிருந்து கொண்டு ஆட்சி, அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு தாகம் மட்டுமே மிகுந்திருக்கிறது. அதை தாகம் என்பதா? பதவி வெறி என்பதா? என அவரவரே முடிவு செய்து கொள்ளட்டும். அவர்கள் தங்களுக்கு கிடைத்த பதவி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மட்டுமே கூடுமான வரை முயன்று கொண்டிருக்கிறார்கள். இதில் ஓபிஎஸ், இபிஎஸ், அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அணி என யாரும் விதிவிலக்குகள் இல்லை. அவர்களுக்கு பதவி வேண்டும். அது சசிகலா குடும்பத்தினரால் பறி போகும் எனில் அவர்களைத் தூக்கி எறிவது இவர்களுக்கு ஒரு பொருட்டில்லை என்பதையே இப்போது அனைத்து காட்சி ஊடகங்களிலும் மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நமது எம் எல் ஏக்களின் முரண்பட்ட பேச்சுகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

இவர்களைப் பொறுத்தவரை, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி, புரட்சித் தலைவி அம்மா ஆட்சி, புரட்சித் தலைவி அம்மாவின் ஆசி பெற்ற சின்னம்மா சசிகலா தலைமையிலான ஆட்சி, சின்னம்மா ஆசி பெற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையிலான ஆட்சி எல்லாமும் ஒன்றே. இவர்களால் தங்களுக்கும், தங்களது பதவிக்கும் ஆதாயம் நீடிக்கும் வரை அவர்களது பெயரை மன எழுச்சியுடன் ஜெபம் போல உச்சரித்து மக்களின் பொறுமையைச் சோதிக்க தயங்கவே மாட்டார்கள். அதே சமயம் அவர்களால் தங்களுக்கு ஆதாயம் இல்லை உபத்திரவம் தான் என்று நினைக்கத் தொடங்கினால் உடனடியாக உதறவும் தயங்க மாட்டார்கள்.

இவர்களது தர்ம யுத்தம் எல்லாம் அவரவர் நலனுக்காக மட்டுமே தவிர தமிழக மக்களின் நலனுக்காக அல்ல! இதை ஜெ இறந்தது முதல் தொடர்ந்து அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்து வரும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். மக்களைப் பொறுத்தவரை எழுச்சி மிக்க தலைமை ஒன்றுக்கான அவர்களது காத்திருப்பு வெறுங்கனவென்றே ஆகிக் கொண்டிருக்கும் அவலம் தான் இன்னும் தீர்ந்தபாடில்லை!

இன்றைய தமிழக அரசியல் பெருங்களத்தில் தியாகராயர் போலவோ, தந்தை பெரியார் போலவோ, முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போலவோ, எழுச்சி மிக்க, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட, தன்னலம் கருதா தலைமை என்ற ஒன்று இனி தமிழக அரசியலில் தோன்றப் போவதே இல்லையா? அதெல்லாம் பள்ளித் துணைப்பாடங்களில் வரும் ஏட்டுச்சுரைக்காய் மட்டும் தானா? அரசியல் கறி சமைக்க வேலைக்காகதோ!

யாமறியோம் பராபரமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com