அரசு மட்டுமல்ல இப்போது மருத்துவமனைகளும் கூட ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ் சேவை வழங்குகிறது!

டிராபிக் ஜாமில் சிக்கித் திணறி ஆம்புலன்ஸ்கள் உரிய நேரத்தில் விபத்தில் காயம்பட்டவர்களை அடைய முடியாத நேரங்களில் எல்லாம் குறிப்பிட்ட இந்த ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தகவல் தெரிவித்தால் போதும்
அரசு மட்டுமல்ல இப்போது மருத்துவமனைகளும் கூட ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ் சேவை வழங்குகிறது!

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் சரியான முதலுதவி சேவைகளும் கூட. ஆனால் நகரத்தின் ஜன நெரிசலில், வாகன நெருக்கடியில் திடீரென நிகழ்ந்து விடும் பயங்கர விபத்துகளின் விளைவுகள் மிக மோசமானவையாக இருந்து பாதிக்கப் பட்டவர்கள் உரிய நேரத்தில் உரிய முதலுதவிகளும், சிகிச்சைகளும் கிடைக்காத காரணத்தால் உயிரிழப்பதும், உறுப்புகளை இழப்பதும் கூட சில நேரங்களில் நிகழ்ந்து விடுவது உண்டு. அம்மாதிரியான நேரங்களில் விதியின் மீது பழியைப் போட்டு விட்டு ஒதுங்கி விடுவதைக் காட்டிலும், அப்படியான சிக்கலான தருணங்களை எவ்வித இழப்புகளும் இன்றி  எப்படிக் கடப்பது? என்று யோசிப்பது தானே புத்திசாலித்தனம்! 

அப்படி யோசித்தார்கள் டெல்லியைச் சேர்ந்த மேக்ஸ் ஹெல்த் கேர் மருத்துவமனை நிர்வாகத்தார். அவர்களின் யோசனையின் பலனே ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்கள்! டிராபிக் ஜாமில் சிக்கித் திணறி ஆம்புலன்ஸ்கள் உரிய நேரத்தில் விபத்தில் காயம்பட்டவர்களை அடைய முடியாத நேரங்களில் எல்லாம் குறிப்பிட்ட இந்த ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தகவல் தெரிவித்தால் போதும். இந்த ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்கள் தகுந்த முதலுதவி உபகரணங்களுடன் உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்தை அடைந்து காயம்பட்டவர்களுக்குத் தேவையான முதலுதவிகளை அளித்து சிக்கலான நேரத்தைக் கடப்பதில் பெரும்பங்கு ஆற்றத் தயாராக இருக்கும். முதலுதவி சரியான நேரத்தில் அளிக்கப்பட்டாலே பாதி சிகிச்சை வெற்றி என்று தான் பொருள். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரச் சற்று தாமதமானாலும் கூட உயிரிழப்புகள் ஏதுமின்றி தவிர்ப்பது சுலபம். முதற்கட்டமாக டெல்லியில் 5 ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்களுடன் துவக்கப்பட்டிருக்கும் இந்தச் மருத்துவப் சேவை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து ஜன நெருக்கடி நிறைந்த, வாகனப் போக்குவரத்து நிறைந்த பிரதான நகரங்களுக்கும் அறிமுகமாகமானால் விபத்து நேர உயிரிழப்புகள் பரவலாகக் குறைய வாய்ப்புகள் உண்டு.

பெருநகர வாகனங்களைப் பொறுத்தவரை தற்போது வேகமான பயணங்களுக்கு மற்ற எந்த வாகனங்களைக் காட்டிலும் ஸ்கூட்டர்களே உகந்தவை. மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திஅரைப் பொறுத்தமட்டில் விபத்து நடந்து 10 முதல் 15 நிமிடங்களுக்குள் தங்களது ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்து விட வேண்டும் என்பதே அவர்களது முதல் டார்கெட். அதை வெற்றி கரமாக அவர்கள் தற்போது செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.

டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரக் கணக்கின் படி டெல்லியில் மட்டும் சுமார் 96,34,376 பதிவு பெற்ற வாகனங்கள் நகர் முழுதும் பயன்பாட்டில் இருக்கின்றன. 
அத்தனை வாகனங்களுக்கும் ஈடாக தற்போது விபத்துக்களின் போது அவசர உதவி அளிக்க ஏதுவாக 200 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளன. இது போதாது... குறைந்த பட்சம் 500 ஆம்புலன்களேனும் இருந்தால் தான் அவசர காலங்களில் புள்ளி விவரக் கணக்கீட்டின் படி உயிரிழப்புகள் ஏதுமின்றி உரிய சிகிச்சை அளிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். 
பெருநகரங்களைப் பொறுத்தவரை விபத்துகளில் சிக்காமலும், விபத்துகளுக்கு காரணமாகமலும் இருக்க முயல்வதே நல்லது. எனினும் இப்படியான அசம்பாவிதங்கள் நேரும் போது அவற்றிலிருந்து உயிரிழப்புகள் இன்றி தப்ப இப்படியான முயற்சிகளை ஆலோசித்து செயல்படுத்துவதும் இன்றியமையாத விசயமே!

சென்னையிலும் இது போன்ற ஸ்கூட்டர் ஆம்புலன்களை மருத்துவமனை நிர்வாகங்களே இயக்கினால் நல்லது தான். சென்னையில் எந்த மருத்துவமனை இதை முன்னெடுக்கப் போகிறது எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com