சொந்த நாட்டில் பலமுறை நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் நானும் ஒருவன்: மிஸோரம் முதல்வர்!

நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களிடம் நிறம் மற்றும் இன ரீதியாக இவர்கள் கையாளும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையே ஒட்டுமொத்த நிறவெறி மற்றும் இனவெறிக்கு மூலகாரணமாக அமைந்து விடுகிறது.
சொந்த நாட்டில் பலமுறை நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் நானும் ஒருவன்: மிஸோரம் முதல்வர்!

உலக அளவில் நாம் அமெரிக்கர்களின் நிறவெறியைப் பற்றியும், இந்திய அளவில் வட இந்தியர்களின் நிறவெறியைப் பற்றியும் பேசி கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் நமது இந்திய மாநிலங்கள் ஒன்றின் முதல்வரே அத்தகைய குற்றச்சாட்டை தனது சொந்த நாட்டின் மீதே எழுப்பி இருப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் நிறவெறி என்பது யாரோ நம்மை மட்டும் குறி வைத்து தாக்கி செயல்படுத்தும் வன்முறை அல்ல, அது உலகம் முழுதும் பரவி இருக்கிறது. ஏன் நமது காலடியில் நமது சொந்த ஊரில், சொந்த வீட்டில் கூட இருக்கத்தான் செய்கிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் வடகிழக்கு இந்திய மாநிலமான மிஸோரம் முதல்வர் லால் தன்வாலா. இவருக்கு வயது 74. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான லால் தன்வாலா மிஸோரம் மாநிலத்தில் 5 முறை முதல்வர் பதவியை வென்று தற்போது வரை முதல்வராகவே பதவியில் நீடிப்பவர். அவர் தனது இளமை முதல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தான் சந்திக்க நேர்ந்த நிறவெறி, இனவெறி சீண்டல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதிலிருந்து;

சில முட்டாள் ஜனங்களுக்கு தங்களது நாட்டின் தன்மை குறித்தே முழுமையாகத் தெரியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விடுதியின் வரவேற்பறையில் நான் சந்தித்த மரியாதைக்குரிய நபர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வியை இன்றும் என்னால் மறக்க இயலாது. உன்னைப் பார்த்தால் இந்தியனைப் போல இல்லையே? என்று சந்தேகம் எழுப்பினார் அவர். அத்தோடு அவர் மீது நான் வைத்த மரியாதை நழுவியது. நான் அவரிடம் கூறிய பதில், இந்தியன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? இந்தியனைப் பற்றிய உங்களது பார்வை என்ன? என்று எனக்கு ஒரே வாக்கியத்தில் பதில் அளியுங்களேன் என்றேன்.

அவரைப் போன்றவர்கள் மட்டுமல்ல, இங்கே நாம் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆட்டு மந்தைகள் போலப் பின்பற்றுகிறோமே அத்தகைய மாட்சிமை பொருந்திய அரசியல் தலைவர்களின் நிலையும் கூட இந்தியாவையும், அதன் இறையாமையையும் புரிந்து கொள்ளும் விசயத்தில் மிக மிக மோசமான ஒரு நிலையில் தான் இருக்கிறது. அவர்களுக்கும் இந்தியாவைப் பற்றிய அடிப்படைப் புரிதல் என எதுவுமே இல்லை. மாநில அரசியல் தலைவர்களை விட்டுத் தள்ளுங்கள், தேசிய அளவில் பெரியகட்சிகளை நிர்வகிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தேசியத் தலைமைகளின் நிலையே நிறவெறி, இனவெறி விசயத்தைப் பொறுத்த வரை இப்படித்தான் எனில், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி பேசி என்ன பயன்?

நீங்கள் பாஜக, காங்கிரஸ், அல்லது வேறு எந்த ஒரு அரசியல் கட்சியின் தேசியத் தலைவராகவோ இருந்து விட்டுப் போங்கள், ஆனால் உங்களுக்கு, உங்களது நாட்டைப் பற்றி எதுவுமே தெரியாது என்றால். நீங்கள் எப்படி உங்களைத் தலைவன் என்று சொல்லிக் கொள்ள முடியும்?

இன்றைய நிலையில் தேசியத் தலைவர்கள் எனத் தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் பல அரசியல்வாதிகளுக்கும் அரசியல் செய்யத் தெரிந்த அளவுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இது மிக மிக முட்டாள்தனமானது மட்டுமல்ல. அது அவர்களின் கல்வி அறிவுக் குறைபாடு மற்றும் தேசபக்தி குறைபாட்டுக்கான மிகப்பெரிய அடையாளம் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல எந்தச் சிறப்புமே இல்லாமலிருந்தும் தங்களை உயர்வாக எண்ணிக்கொள்ளும் அவர்களுடைய குணக்குறைபாடும் கூட இது.

நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களிடம் நிறம் மற்றும் இன ரீதியாக இவர்கள் கையாளும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையே ஒட்டுமொத்த நிறவெறி மற்றும் இனவெறிக்கு மூலகாரணமாக அமைந்து விடுகிறது.

இந்தியாவின்  வட கிழக்கு பிராந்தியங்கள்...

இவர்களுக்குத் தெரியாது. இந்தியா உலகின் மூன்று பெரிய இனங்களில் இருந்து தோன்றிய கலப்பின மக்களை தன்னகத்தே கொண்டுள்ளது என. சமீபத்தில் கூட மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருந்தார், தென்னிந்தியாவைச் சேர்ந்த திராவிட மக்கள் மிகக் கருப்பானவர்கள் என, அவர்களுக்குத் தெரியவில்லை வட இந்தியா ஆரியக் கலப்பின மக்களைக் கொண்டது என்பதும், வட கிழக்கு இந்தியா மங்கோலியக் கலப்பினங்களால் ஆனது என்பதும். இவர்களைத் தவிர நமது நாட்டில் மண்ணின் மைந்தர்களென பல்வேறு பழங்குடி இனங்களும் கூட உள்ளன.

அதனால் தான் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பிராந்தியத் தன்மை மிகுந்திருக்கிறது. அதனால் தான் அங்கு இன உணர்வும் மிக அதிகம். ஏனெனில் வடகிழக்கு மாநில மக்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுமே தங்களுக்கு இணையாகக் கருத மறுக்கிறார்கள் என்பதால் தான். இது தான் இந்திய மக்கள் தங்களது சக நாட்டவரான வடகிழக்கு பிராந்திய மக்களை மதிக்கும் லட்சணம்.

மத்திய அரசு வடகிழக்குப் பகுதி மக்களின் நலனுக்காக எத்தனை விதமான முயற்சிகளை மேற்கொண்ட போதும், அங்கு இப்போதும் பிற மாநிலத்தார் வடகிழக்குப் பிராந்திய பெண்கள் மற்றும் மாணவர்கள் மீது நிகழ்த்தும் நிறவெறி, இனவெறி துவேஷம் மட்டும் எப்போதும் ஓயவே இல்லை.

2014 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த  நிடோ டானியா எனும் மாணவர் டெல்லியில் நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். அந்த மரணத்துக்கான நீதி கேட்பு விசயத்தில் இந்தியா முழுவதிலும் வாழும் குறிப்பாக மாநகரங்களில் வாழும் அனைத்து வடகிழக்கு பிராந்திய மக்களும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதால் அரசு எம்.பி. பெஸ்பரூவா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இது மட்டுமல்ல, சமீபத்தில் பெங்கலூருவில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஹிஜியோ குங்க்டே, தனது வீட்டு உரிமையாளாரால் நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாகச் செய்தி. அந்த உரிமையாளர் ஹிஜியோவை விடாமல் 90 நிமிடங்களுக்கு இனவாத வசைச் சொற்களை எழுப்பித் தாக்கி இருக்கிறார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது என்ன சொல்வது? இந்தியாவில் சொந்த நாட்டினரே பிற மக்களால் அந்நியர்களாகக் கருதப்படும் நிலையை எப்போது வெல்ல முடிகிறதோ அப்போது தான் நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவ முடியும். 

தேச பக்தி என்பது என்ன? ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் நாட்டின் இறையாமையை தமக்குள் நன்கு உணருவதும், பிறருக்கு உணர்த்துவதும் தான்!

என்று முடிக்கிறார் மிஸோரம் முதல்வர் லால் தன்வாலா!

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com