இன்றைய இளம் இயக்குனர்கள் குறித்து தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத்!

இன்றைய இளம் இயக்குனர்கள் குறித்து தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத்!

நான் எதையோ சாதித்து விட்டதாக இப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்போனால் இது வரை நான் செய்த படங்களில் எனக்கு இன்னமும் திருப்தியில்லை என்று தான் நான் கூற விரும்புகிறேன்.

நேற்று பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு திரைப்படத்துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி தெலுங்குப் பட உலக பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்க தொடர்ந்து அவரைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். திரைத்துறையில் அவரது சாதனைகளுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது கே.விஸ்வநாத்துக்கு வழங்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் இவரது சாதனைகளைக் கொண்டாடி அங்குள்ள ரசிகர்கள் இவரை  ‘கலா தபஸ்வி’ என்று அன்புடன் குறிப்பிடுகிறார்கள். கலா தபஸ்வி என்றால் ஒரு தவம் போல கலைகளை ஆராதிப்பவர்கள் என்று பொருள். இயக்குனர் கே.விஸ்வநாத் தனது ஒவ்வொரு திரைப்படத்தையுமே மாபெரும் தவம் போலத்தான் பெரும் கலைப்படைப்பாக முனைப்புடன் செதுக்கி கொணர்ந்தார். எனவே அங்கத்திய மக்கள் அவரை அப்படிப் பாராட்டுவது வழக்கமாம். 

ஆனால் கே.விஸ்வநாத்தைப் பொறுத்தவரை அவர் தனது சாதனைகளின் மேல் திருப்தி கொண்ட மனிதராக இல்லை. சமீபத்தில் அவரளித்த பேட்டியொன்றில்; நான் எதையோ சாதித்து விட்டதாக இப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்போனால் இது வரை நான் செய்த படங்களில் எனக்கு இன்னமும் திருப்தியில்லை என்று தான் நான் கூற விரும்புகிறேன். நான் மட்டுமல்ல; நீங்கள் எந்த ஒரு கலைஞரிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டாலும் அவர்களால் அப்படித்தான் கூற இயலும். கலை, இசை, கவிதை போன்ற துறைகள் எல்லாம் மிகப் பெரிய சாகரம் போன்றவை. அந்தக் கடலை நாம் ஒரு துளியாக்கி நம்மால் பருகி விட முடியுமா? நான் சங்கராபரணம் திரைப்படத்தை இயக்கினேன். ஆனால் அதைத் தாண்டியும் நான் இயக்க வேண்டிய படம் என ஏதோ ஒன்று இருப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது. என்னைப் பொறுத்த வரை ஒரு கலைஞனுக்கு தனது வேலையில் திருப்தி என்ற விசயம் மட்டும் எப்போதுமே கிட்டவே கிட்டாது.

சினிமாவைப் பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கலாம். சிலர் பொழுது போக்க மட்டுமே சினிமா பார்ப்பதாகச் சொல்லலாம். சிலருக்கோ நாங்கள் சினிமாவில் ஏதாவது ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் கலைக்காக பெரிய சாதனை எதுவும் செய்து விட்டதாக நினைக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன், அது என்னவென்றால் எனது திரைப்படங்களில் சமூக நீதிகளை மீறி நான் எதுவும் புதுமை செய்யவில்லை என்பதே அது!

இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு; நான் ஏன் அவர்களுக்கு எதுவும் சொல்ல வேண்டும். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் மிகுந்த திறமைசாலிகள் அதனால் தான் தயாரிப்பாளர்கள் அவர்களது வேலைத் திறனை நம்பி கோடி கோடியாக கொண்டு போய் அவர்களிடம் கொட்டுகிறார்கள். என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com