பாகுபலிக்கு காஸ்டியூம் டிசைன் செய்ய ரமா ராஜமெளலி யாரைப் பின்பற்றினர்?

காஸ்டியூம்கள் அனைத்துமே  பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதால் எதை அடிப்படையாகக் கொண்டு அந்த உடைகளை நீங்கள் டிசைன் செய்தீர்கள் என்ற கேள்விக்கு ரமா ராஜமெளலி சொன்ன பதில் 
பாகுபலிக்கு காஸ்டியூம் டிசைன் செய்ய ரமா ராஜமெளலி யாரைப் பின்பற்றினர்?

பாகுபலி 1& 2 திரைப்படங்களின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி எனில்; அந்தத் திரைப்படங்கள் மட்டுமல்ல ராஜமெளலியின் அனைத்து திரைப்படங்களுக்குமே காஸ்டியூம் டிசைனராகப் பணியாற்றியவர் அவரது மனைவி ரமா ராஜமெளலி. பாகுபலி-1 திரைப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ராஜமாதா சிவகாமி தேவியின் உடையலங்காரங்களுக்காக ரமா ரசிகர்களிடையே அதிலும் பெண் ரசிகர்களிடையே வெகுவான பாராட்டுகளைப் பெற்றிருந்தார். வழக்கமான படங்கள் போலில்லாது இது ராஜா காலத்து திரைப்படம் என்பதோடு அவற்றுக்கான காஸ்டியூம்கள் அனைத்துமே இன்றைய உடைகளை விட பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதால் எதை அடிப்படையாகக் கொண்டு அந்த உடைகளை நீங்கள் டிசைன் செய்தீர்கள் என்ற கேள்விக்கு ரமா ராஜமெளலிசொன்ன பதில் ஆச்சரியமளிக்கிறது. 

பாகுபலி1& 2 திரைப்படங்களுக்கு காஸ்டியூம் டிசைன் செய்ய ரமா பின்பற்றியது ‘அமர் சித்ர கதா’ சிறுவர் கதைப்புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கான உடைகளை என்கிறார். அமர் சித்ர கதா என்பது நம்ம ஊர் அம்புலி மாமா கதைகள் தான். அவை இந்தியில் அமர் சித்ர கதாவானது. சிறு வயதில் அம்புலி மாமா படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் அந்தப் அந்தப் படக்கதைகளில் நாம் கண்ட உடையலங்காரங்களைத் தான் ரமா பாகுபலி 1& 2 திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது.

ரமாவின் பதில் உள்ளுறைந்திருக்கும் மற்றொரு சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? படங்களுக்கான உடைகள் மட்டுமல்ல படத்தின் சில முத்திரைக் காட்சிகளும் கூட நமக்கு அமர்சித்ர கதா அலைஸ் அம்புலிமாமாவின் பட்டி விக்ரமாதித்தன் கதையை நினைவூட்டுபவையே! குறிப்பிட்டுச் சொல்வதென்றால் பல்லாள தேவனின் மகனது சிரசை அறுத்து வீசி விட்டு விச்ராந்தியாக மகேந்திர பாகுபலி (சிவு) கையில் வாளேந்தி நடந்து வரும் காட்சி. மற்றொன்று கட்டப்பா சிவுவின் காலை எடுத்து தனது உச்சந்தலையில் சூடிக் கொள்ளும் காட்சி. இந்த இரண்டுமே நாம் அம்புலிமாமாவின் படக்கதைகளில் எப்போதோ பார்த்திருந்த உணர்வைத் தருபவை.

இந்தப் படத்தின் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. காட்சிகள் அனைத்துமே ஒரு சிறுவர் படக்கதைக்குண்டான சாகஷங்களுடனும் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் நகர்த்தப்படுவதால் படத்தில் கதை என்ற வலுவான பின்னணி எதுவுமின்றியும் ஒரு எளிமையான சிறுவர் படக்கதையில் பெரியவர்களுக்கான காதலையும், பழிவாங்கலையும், அரசர்களின் காலத்துக்கே உரிய போர் வியூக முறைகளையும் கலந்து பாகுபலி -1 மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதோடு அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பில் நம்மைக் காத்திருக்கவும் வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com