சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களும் சட்டமும்!

சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்களிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டியதுள்ளது. முற்றிலும் குழந்தைகள் நலன் கருதி உள்ள இணைய தளங்களை மட்டும் அவர்களுக்குக் காட்ட வேண்டியதுள்ளது.
சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களும் சட்டமும்!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கன்னி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி தனியாக வீட்டில் இருந்த சமயத்தில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் திருமணமான வாலிபரான பொய்யாழி (வயது26) என்பவர் திடீரென சிறுமி வீட்டுக்குள் புகுந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

போரூரை அடுத்த மதநந்தபுரம் மாதா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு, இவரது மகள் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டு இளைஞன் தஷ்வந்த் பாலியல் கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரச் செய்தது.

எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் முத்து என்பவரின் மகள் ரித்திகா. 3 வயதான ரித்திகா சனிக்கிழமை திடீரென்று காணாமல் போனார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை கடைசியில் மாநகராட்சி குப்பை தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்தக் குழந்தைக் கொலையானது நகைக்காக நிகழ்ந்ததா? அல்லது இதுவும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொலை தானா? என்ற நோக்கில் வழக்கு விசாரணை நீள்கிறது.

இது போன்ற சம்பவங்கள் அங்கொன்று இங்கொன்று என்றிருந்து இப்பொழுது அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்ந்த இண்டூர் உயர்நீதி மன்ற வழக்கறிஞரான கமலேஷ் வஸ்வானி, இத்தகைய விபரீதங்களுக்கு முழு முதற்காரணமாக இருப்பவை ஆபாச இணைய தளங்கள் என்பதைக் கண்டறிந்தார்.

கமலேஷ் வஸ்வானி

மேலும் 16, டிசம்பர்,2012 டில்லியில் நடந்த கூட்டு பாலிஅல் பலாத்காரத்தைக் கண்டு பொங்கு எழுந்தார். அதனால் 2013-இல் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து ஆபாச இணையங்களையும் தடை செய்ய கோரி ஒரு பொது நல வழக்கொன்றை பதிவு செய்தார். இணையத்தில் கிடைக்கும் ஆபாசங்களுக்கும் செக்ஸ் குற்றங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக கருதி இந்த இணையத் தளங்களை முடக்கக் கோரி வழக்கை பதிவு செய்தார். அவரது மனுவின் பிரதான நோக்கம் இணையத்தள ஆபாசங்களை முடக்குவதே!

ஆபாச இணைய தளங்களை முடக்குவது இயலாத காரியம். அப்படி செய்தால் அதே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ள நல்ல இலக்கியங்களும் முடக்கப்பட்டு விடும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. “இந்தியாவில் ஆபாச இணைய தளங்கள் பெருகி விட்டன. அவற்றை முடக்க உத்தரவிட வேண்டும்” என்று கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
 
இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.சவுஹான் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பஞ்ச்வானி, “ஆபாச இணைய தளங்களை முடக்க இந்தியாவில் போதிய சட்டங்கள் இல்லாததால், இத்தகைய இணைய தளங்கள் பெருகி விட்டன. நாட்டில் 20 கோடி ஆபாச வீடியோக்கள், காட்சிகள் இலவசமாக கிடைக்கின்றன” என்று வாதிட்டார்.
 
அப்போது மத்திய அரசின் பதில் மனுவை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் தாக்கல் செய்தார். அந்த மனுவில் "ஆபாச இணைய தளங்கள் அனைத்தையும் முடக்குவது இயலாத காரியம். ஆபாச தளங்களை முடக்க வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கணினி தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்குரிய மென்பொருளுடன் அதை விற்பனை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இணையத்தில் ஆபாச படங்களை அளிக்கும் 4 கோடி வலைத் தளங்கள் இருப்பதாகவும். இதில் ஒரு வலை தளத்தை முடக்கினால் 4 வலைத் தளங்கள் புதிதாக முளைப்பதாகவும், இந்த விடயத்தில் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்
தெரிவித்தது.
 
அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் முன் விசாரணைக்கு வந்தது. வஸ்வானியும் தன் மனுவில் ஆபாச இணைய தளத்தின் கேடுகளை பற்றியும் குறிப்பாக குழந்தைகள் சம்மந்தமான ஆபாசங்களை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஆபாசத்தை பார்ப்பதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்துதல், வன்முறைத் தூண்டுதல், சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத பழக்க வழக்கங்கள், குழந்தைகள் சீரழிவு, பெண்களின் மாண்புக்கு கேடு விளைவித்தல் போன்றவை நிகழும் என்றார். ஆனால் ஆபாச இணையதளங்கள் குறித்தான ஆய்வுகளில் ஒரு சில தரப்பட்டவை, பெண்களும் விருப்பத்துடன் இதிபோன்ற படங்களை பார்ப்பதாக சொல்கின்றன. ஆனால் இக்கருத்தை வஸ்வானி ஏற்கவில்லை. இந்தியப் பெண்கள் இது போன்ற படங்களைப் பார்ப்பதை அவமானமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில் பாலியல் குற்றவாளிகள் இதுபோன்ற குற்றங்களை செய்வதற்கு முன் ஆபாச படங்களை பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே ஆபாச தளங்கள் இத்தகையோரிடம் பெண்களின் மீது மாற்ற முடியாத எதிர்மறை பிம்பங்களை ஏற்படுத்திவிடுவதாக வஸ்வானி குறிப்பிடுகின்றார்.

சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பது, தரவிறக்கம் செய்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். தணிக்கை செய்யப்பட்டு சான்றளிக்கப்படாத படங்களை பொது அரங்கில் காட்டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் தனிமையில் வயதுவந்த ஒருவர், கணினியில் அவராக விரும்பி ஆபாசப் படங்களைப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாத நிலை இருக்கிறது. எனவே வஸ்வானி தனது மனுவில் தொழில்நுட்ப சட்டம், பிரிவு-67 படி ஆபாச படங்களை வெளியிடுதல் மற்றும் ஒளிபரப்புதல் எவ்வளவு குற்றம் என்பது பற்றியும், அவற்றை தடுக்கும் முறைகளை எப்படி  நடைமுறை படுத்த முடியும் என்பது பற்றியும் விவரமாக விளக்கியிருந்தார்.

கடந்த ஆகஸ்டு, 2015 அன்று மத்திய அரசு இணைய தள சேவையாளர்களிடம் 857 ஆபாச இணைய தளங்களை மூட உத்தரவிட்டது. வழக்கறிஞர் கமலேஷ் தன்னுடைய பேட்டியில் “இது மோடி அரசு பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என மனதார பாராட்டினார்.

இன்றைய கால கட்டத்தில், குழந்தைகளை ஸ்மார்ட் போன்கள், டேப்ளட், பி.சி.க்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து விலக்கி வைக்க முடியவில்லை. பெற்றோர்கள் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துகையில், குழந்தைகள், ஒன்று அல்லது ஒன்றரை வயது முதல், போன்களில் தோன்றும் வண்ணக் கோலங்களினால் கவரப்படுகிறார்கள். அவற்றைக் கேட்டு அடம் பிடிக்கிறார்கள்.
பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை அமைதிப்படுத்த போன்களை அவர்கள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். குழந்தைகள் இரண்டு வயதை அடைந்தவுடன், அவர்களுக்கு குழந்தைகளுக்கான பாடல்கள், பாடல்கள் கொண்ட விடியோ காட்சிகளை, போனில் இயக்கிக் காட்டுகின்றனர். இந்தப் பழக்கம் தொடர்ந்து, மூன்று மற்றும் நான்கு வயது சிறுவர் சிறுமியர், தாங்களாகவே இந்த விடியோ உள்ள இணைய தளங்களை இயக்கத் தொடங்குகின்றனர். எல்லாமே, ஐகான் எனப்படும் குறும்பட அடிப்படையில் உள்ளதால், சிறுவர்களுக்கு, இந்த இணைய தளங்களைத் தேடி இயக்குவது எளிதாகவே உள்ளது. இருப்பினும், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்களிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டியதுள்ளது. முற்றிலும் குழந்தைகள் நலன் கருதி உள்ள இணைய தளங்களை மட்டும் அவர்களுக்குக் காட்ட வேண்டியதுள்ளது.

ஆக மொத்தத்தில், The Juvenile Justice(Care and Protection of Children) Act,2000, The Protection of Children from Sexual Offences Act, 2012, The Immoral Traffic Prevention Act, 1956 என எத்தனை சட்டங்கள் போட்டாலும், அரசு எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், சமூகத்தில் ஒவ்வொரு தனி நபரும், குடும்பத்தினரும் மிகுந்த கண்காணிப்புடனும் இருப்பது நலன்.

- C.P. சரவணன், வழக்குரைஞர், 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com