ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமரையே நேரில் அழைத்து விளக்கம் கேட்கும் அதிகாரம் நாடாளுமன்றக் குழுவுக்கு உண்டு!

இந்த விவகாரத்தில், யாரை வேண்டுமானாலும் அழைத்து விளக்கம் கேட்கும் அதிகாரம் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவுக்கு உள்ளது. உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தால், பிரதமரையே நேரில் அழைக்க முடியும்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமரையே நேரில் அழைத்து விளக்கம் கேட்கும் அதிகாரம் நாடாளுமன்றக் குழுவுக்கு உண்டு!

ரூபாய் நோட்டு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநரும், மத்திய நிதித் துறை உயரதிகாரிகளும் அளிக்கும் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், பிரதமரையே நேரில் அழைத்து விளக்கம் கேட்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவுக்கு (பிஏசி) அதிகாரம் உள்ளது என்று அதன் தலைவர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், மத்திய நிதித் துறை செயலர் அசோக் லவசா, பொருளாதார விவகாரச் செயலர் சக்திகாந்த தாஸ் ஆகியோருக்கு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அந்தக் கேள்விகளுக்கு, வரும் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஏசி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி.தாமஸ், பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நாங்கள் அனுப்பிய கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. வரும் 20-ஆம் தேதி, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன் அவர்கள் பதிலளிக்க வேண்டும். அந்த பதில்கள் குறித்து பிஏசி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித் துறை உயரதிகாரிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்பர் என்றார் அவர்.
பிரதமருக்கு அழைப்பு?: ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், பிரதமர் மோடியை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்து, கே.வி.தாமஸ் கூறியதாவது:
இந்த விவகாரத்தில், யாரை வேண்டுமானாலும் அழைத்து விளக்கம் கேட்கும் அதிகாரம் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவுக்கு உள்ளது. உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தால், பிரதமரையே நேரில் அழைக்க முடியும். ஆனால், 20-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பிறகே, அதுகுறித்து முடிவெடுக்கப்படும்.
"தவறாக வழிநடத்துகிறார்': ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின்னர், பிரதமர் மோடியை நான் சந்தித்தேன். அப்போது, 50 நாள்களுக்குள் நிலைமை சீராகிவிடும் என்று தெரிவித்தார். ஆனால், அவர் கூறியது போல நிலைமை சீரானதாகத் தெரியவில்லை.
தனது தவறான முடிவுகளை மறைப்பதற்காக, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார் பிரதமர். "அழைப்பு முறிவு' உள்ளிட்ட பல்வேறு தொலைதொடர்பு பிரச்னைகள் நிலவும் நமது நாட்டில், செல்லிடப்பேசி மூலம் பணப் பரிவர்த்தனைகள் சுலபமாக நடைபெறும் என்று பிரதமர் எப்படி எதிர்பார்க்க முடியும்?
என்னென்ன கேள்விகள்: ரூபாய் நோட்டு வாபஸ் முடிவை மேற்கொண்டவர்கள் யார்-யார்?, இந்த நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகளுக்கு எவ்வளவு பணம் திரும்ப வந்துள்ளது?, வங்கிகளில் உள்ள தங்களது பணத்தை எடுக்க, மக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கான சட்டம் உள்ளதா?, எவ்வளவு புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன?, கருப்புப் பண பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதா? என்பன போன்ற கேள்விகள், ஆர்பிஐ ஆளுநருக்கும், நிதித் துறை உயரதிகாரிகளுக்கும் கேட்கப்பட்டுள்ளதாக கே.வி. தாமஸ் தெரிவித்தார்.
ஊடகங்கள் முன்னிலையில் விசாரணை?: இதனிடையே, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைகளை, ஊடகங்கள் முன்னிலையில் மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக கே.வி.தாமஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, கேரள மாநிலம், கொச்சியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய அவர், "பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைகளை, ஊடகங்கள் முன்னிலையில் மேற்கொள்வது தொடர்பாக பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே தலைமையிலான துணைக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com