தாழ்த்தப் பட்டவர்கள் மாடுமேய்த்த காலமெல்லாம் மலையேறி விட்டது டாக்டரே!

ஏவல்பணி செய்து கொண்டிருந்த மக்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை அவர்கள் தலை நிமிரத் தொடங்கி வெகு காலம் ஆகிறது. உங்களைப் போன்ற .அரசியல்வாதிகள் தான்.
தாழ்த்தப் பட்டவர்கள் மாடுமேய்த்த காலமெல்லாம் மலையேறி விட்டது டாக்டரே!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி ஜல்லிக்கட்டை நிராகரித்துப் பேசிய வீடியோ ஒன்றைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு தடை நீக்கப் போராட்டத்தில் பீட்டா அங்கத்தினர்களையும், அவர்களது ஆதரவாளர்களையும் தவிர்த்து தமிழகம் முழுதுமே ஒற்றுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; மாணவப் போராட்டம் குறித்து அவர் முன் வைத்த விவகாரங்கள் அத்தனையும் கருத்தில் கொண்டு யோசிக்க வேண்டிய விசயங்கள் தான். ஏனெனில் இன்று களமாடிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் அவர் முன் வைத்த குற்றச்சாட்டை கிடப்பில் போட்டு விட முடியாது.  

கிருஷ்ணசாமி முன் வைத்த விவகாரத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை நோக்கி,

“இன்று நீ ஜல்லிக்கட்டு வேண்டும், நாட்டு மாடு வேண்டும் என்று போராடி, மத்திய, மாநில அரசுகளை நிர்பந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வரச் செய்து ஜல்லிக்கட்டு நடத்துவாய். அது மட்டும் போதுமா நாட்டுக்காளைகளை வளர்க்க? 60 களில் வந்த பசுமைப் புரட்சி உனக்கு வேண்டாம், 80 களில் வந்த வெண்மைப் புரட்சியும் உனக்கு வேண்டாம், கார், ரயில், விமானத்தில் பயணம் செய்யாதே, பெற்றோர்களிடம் சொல்லி நாட்டுக் காளை வாங்கி, கட்டை வண்டியில் பூட்டி அதிலேயே பயணம் செய். அப்போது தானே காளைகளை வளர்க்க முடியும்? ஒரு நாள் ஜல்லிக்கட்டு மட்டும் நடத்தினால் எப்படி நீ காளையை வளர்க்க முடியும்? நிறைய நாட்டுக் காளைகள் உற்பத்தி வரணும், சாணம் போடனும், அப்போ தான் ஆர்கானிக்னு சொன்னா, நீ வீட்டுக்கு வீடு இரண்டு காளைகள் அல்லது 4 பசுமாடுகள் இல்ல வச்சிருக்கணும். அப்படி வச்சிருந்தா அதை வளர்ப்பது யார்? கம்ப்யூட்டர் கல்வி படித்து விட்டு நீ சென்னையிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும் இருந்தால் இங்கே மாடு வளர்ப்பதற்கு யார் இருப்பார்கள் கீழே? இளிச்சவாயன் தாழ்த்தப் பட்டவன் கிடைப்பான், அவனை மாடு மேய்க்கப் போட்டு விட்டு நீ அமெரிக்கா போய் விடுவாய். இது தான் தமிழர் கலாச்சாரமா? மீண்டும் தமிழ் சமுதாயத்தை ஆண்டான் அடிமை சமூக நிலைக்கு கொண்டு போவதற்கு தான் நீங்கள் இப்போது போராடிக் கொண்டிருக்கிறீர்களா?”

என்று தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் காட்டமாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.

Video link...

கிருஷ்ணசாமிக்கான பதில்:

எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் டாக்டரே! தாழ்த்தப் பட்டவர்கள் மாடு மேய்த்த காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. இன்று அவர்கள் அரசியல் அதிகாரங்களுடன், அரசு வேலை வாய்ப்புகளுடன் செளகரியமாக வாழ தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையும், முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் சமூக அங்கீகாரம் பெற்று தலை நிமிர்ந்து வாழும் முயற்சியில் வெற்றி காணத் தொடங்கி இருக்கிறது. ஆண்டான் என்றும், ஆதிக்க ஜாதி என்றும் நீங்கள் பட்டியல் வாசிக்கக் கூடியவர்களும் கூட இன்று படித்து, பதவிகளில் இருக்கக் கூடிய தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். கல்வியும், அதன் மூலமாகக் கிடைத்த அங்கீகாரமும் அவர்களுக்கு அந்த மரியாதையை நீடித்திருக்கச் செய்கிறது. ஒரு வேலை நீங்கள் சொல்வது போல நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பினால் மாணவர்கள் அவரவர் சொந்தக் குடும்பத்தாரை நம்பி வளர்க்க வேண்டிய நிலையில் தான் இப்போது இருக்கிறார்களே தவிர இன்று கிராமங்களில் கூட தாழ்த்தப் பட்டவர்கள் மாடு மேய்ப்பதில்லை. 

கிராம சமுதாயத்தில் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை;
மாடு மேய்க்க, தோட்ட வேலை செய்ய, வீடுகளில் ஏவல் பணி செய்ய, கிராமத்தில் இளவு விழுந்தால் அண்டை, அசலுக்குச் சொல்லி அனுப்ப, என்றெல்லாம் ஏவல்பணி செய்து கொண்டிருந்த மக்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீகள்? இல்லை அவர்கள் தலை நிமிரத் தொடங்கி வெகு காலம் ஆகிறது. உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் தான் சுயலாபத்துக்காக அவர்கள் அப்படியே இருப்பதாக பொய்க்கனலை விசிறி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

மாணவர்களிடம் ஒரு விண்ணப்பம்:

இன்று ஜல்லிக்கட்டுக்காகவும், நாட்டுக்காளைகளுக்காகவும் போராடும் நாம் ஜல்லிக்கட்டை முடித்து விட்டு என்ன செய்வதாக இருக்கிறோம்? வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு வளர்க்கலாம். ஏன் நம்மால் முடியாதா என்ன? இருபது வருடங்களுக்கு முன்பு வரை மாடுகள் வளர்க்கப்படாத வீடுகள் தான் அரிதாக இருந்தன. ஒவ்வொரு வீட்டின் வாசலைக் கடந்ததும் முன்புறமாகாவோ, கொல்லைப் புறத்திலோ, அல்லது வீட்டை ஒட்டிய இடைகழியிலோ நிச்சயம் மாட்டுத் தொழுவம் இருந்ததே! தொழுவத்தில் சாணி மிதிக்காத, தோட்டத்துக்கு எருச்சாணம் சுமக்காத அன்றைய பிள்ளைகள் எவரேனும் சம்சாரி வீடுகளில் உண்டோ!

மாடு மேய்ப்பது அப்படி ஒன்றும் நமக்கு அந்நியமான வேலை இல்லை. ஆதியில் வேட்டைச் சமுதாயமாக பரிணமித்தது தான் மனித குலம் மொத்தமுமே! அவர்கள் வேளாண் கற்றுக் கொண்டதன் வெற்றிப் பண்டிகை தான் தைப் பொங்கல் திருநாள். வேளாண் சமூகத்தின் அடிப்படையான மேய்ச்சல் தொழில் என்பது அதன் ஒவ்வொரு பிரிவுக்கும் அறிமுகமானது தான். அதனால் ஜல்லிக்கட்டு தடை நீங்கி வீட்டுக்கு வீடு நாட்டு மாடுகள் வளர்க்கப் படும் சூழல் வந்தால் அப்போது ஆண்டான் அடிமை பேதமைகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றாக மாடு மேய்க்கலாம். ஆரம்பத்தில் எல்லாமும் கஷ்டமாகத் தான் இருக்கும். பிறகு பழகிப் போகும்.

Video courtsy: youtube

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com