மந்திரம் ஓதி குளத்து ஆவியை விரட்டினால் நீரில் மூழ்கிய குழந்தை பிழைத்து விடுமா?

“ உண்மையில் குழந்தையைப் பலி கொண்டது குளத்து ஆவி அல்ல; எங்கள் ஊர் மக்களின் அறியாமையும், மூட நம்பிக்கையும் தான்”
மந்திரம் ஓதி குளத்து ஆவியை விரட்டினால் நீரில் மூழ்கிய குழந்தை பிழைத்து விடுமா?

மேற்கு வங்க மாநிலம் சுந்தர வனப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் 3 வயதுக் குழந்தை ஒன்று நேற்று பிற்பகலில் காணாமல் போனது. ஊரெல்லாம் குழந்தையைத் தேடிய பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கடைசியாக குழந்தையை மூழ்கிய நிலையில் அவளது வீட்டின் பின்புறமிருந்த குளத்தில் இருந்து கண்டெடுத்தனர். குழந்தையிடம் எந்த அசைவுகளுமில்லாத நிலையிருந்தும் குழந்தை அப்போது உயிருடன் தான் இருந்ததென கிராம மக்களில் சிலர் தெரிவித்துள்ளனர். அப்படி குளத்தில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட குழந்தையை உடனடியாக கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடி காப்பாற்றுவதை விட்டு விட்டு அடுத்ததாக அந்த கிராம மக்களும், அந்தக் குழந்தையின் உறவினர்களும் செய்த செயல் அறியாமை மற்றும் மூடநம்பிக்கையின் உச்சம்.

குழந்தையைத் தனது புஜங்களில் தூக்கி அமர வைத்துக் கொண்ட அதன் உறவினர் ஒருவர் மீண்டும் அந்தக் குளத்துக்குள் இறங்கி குழந்தையோடு நீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவரைச் சுற்றியிருந்த உறவினர்களும், கிராம மக்களும் ஏதோ மந்திர உச்சாடனம் செய்து குளத்து நீரை கையால் அடித்து தள்ளிக் கொண்டிருந்தனர். இது தொன்று தொட்டு குளத்தில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற அவர்களது கிராமத்தினர் பின்பற்றும் முறையாம். இப்படிச் செய்வதால் குழந்தையை குளத்தில் மூழ்கடித்ததாக நம்பப்படும் குளத்து ஆவி ஓடி விடுமாம். இப்படித் தான் சொல்கிறார்கள் அந்த கிராமத்தினர். 

குழந்தையின் உறவினர்கள் இந்த சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட அங்கே மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டது என அறிவித்திருக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்கிராமத்து பள்ளி மாணவியொருத்தி;
“ உண்மையில் குழந்தையைப் பலி கொண்டது குளத்து ஆவி அல்ல; எங்கள் ஊர் மக்களின் அறியாமையும், மூட நம்பிக்கையும் தான்”

எனக் கூறி இருக்கிறார். இந்தியாவில் பூரண கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் சிலவற்றுள் முதன்மையானதாகக் கருதப் படும் மேற்கு வங்கத்தில் இன்னமும் இப்படியான மூடநம்பிக்கைகள் வலுவுடன் இருப்பதும் அது ஒரு குழந்தையின் உயிரைப் பலி கொள்வதும் மிகுந்த துக்கத்தைத் தருகிறது.

இதைப் பற்றி அந்தக் கிராமத்து மக்களிடம் கேட்டால், “குழந்தை இறந்தது குறித்து எங்களுக்கும் துக்கமாகத் தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் எங்களது மூத்தோரும், முன்னோரும் செய்த சடங்கு முறைகளைத் தானே பின்பற்றினோம்... இதில் எங்களது தவறென்ன? என்று பதில் வருகிறது. ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியாவுக்காகப் போராடும் பாரதப் பிரதமர் மோடி அவர்களே உங்களது வேலையோடு வேலையாக...முதலில் நமது இந்தியப் பெருநாட்டில் நிலவி வரும் மூடநம்பிக்கைகளைப் பற்றிய பட்டியல் ஒன்றையும் தயாரித்து அதையும் வேரோடு களைய முற்படுங்கள்.
 

Image courtsy: NDTV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com