இதுவரை வெளிவராத காந்தி கடிதங்கள் மூலமாகவாவது நேதாஜி மரண மர்மம் விலகுமா?

காந்தி அப்படி என்ன விதமான அரசியல் நெருக்கடி நிலைகளை போஸிடம் பகிர்ந்து கொண்டிருப்பார் என்றறிந்து கொள்ளும் ஆர்வத்தை இக்கடிதங்கள் தூண்டுகின்றன.
இதுவரை வெளிவராத காந்தி கடிதங்கள் மூலமாகவாவது நேதாஜி மரண மர்மம் விலகுமா?

1931 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காந்திஜி லண்டன் சென்றார். அப்போது அங்கே வைத்து ஜான் ஹென்றி எனும் ஓவியர் காந்தியை பென்சில் ஓவியம் வரைந்தார்.

இந்த ஓவியம் அந்நாளில் கிங்ஸ்லி ஹால் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லண்டன்வாசி ஒருவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையுடன் காந்திஜி தரையில் அமர்ந்து கொண்டு எழுதுவது போல வரையப் பட்டுள்ள இந்த பென்சில் சித்திரத்தின் அடியில் ஜான் ஹென்றி... வரையப்பட்ட நாள், தேதி, ஆண்டுடன்

“Truth is God / MK Gandhi / 4.12.'31."

என்றவாசகங்களைப் பொறித்திருந்தார். 

இந்த ஓவியம் மட்டுமல்ல, இதனோடு இணைந்து 1940 ஆம் ஆண்டு வாக்கில் காந்திஜி தமது கையால் சரத் சந்திர போஸுக்கு எழுதிய சில கடிதங்களும் கூட லண்டன் மாநகரின் சோத்பிஸில் ஜூலை 11 ஆம் நாள் அன்று விற்பனைக்கு வைக்கப்பட உள்ளனவாம். இந்திய சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு முன்னான கடைசி சில மாதங்களில் தாம் அனுபவித்த அரசியல் நெருக்கடி நிலைமைகளைக் கொட்டி காந்தி சரத் சந்திர போஸுக்கு எழுதிய அக்கடிதங்கள் அன்றைய அரசியல் உண்மை நிலையை அறிய உதவலாம். இந்தக் கடிதங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் எங்கும் வெளியிடப்படாதவை என்ற சிறப்புடையவை என்பதால், காந்தி அப்படி என்ன விதமான அரசியல் நெருக்கடி நிலைகளை போஸிடம் பகிர்ந்து கொண்டிருப்பார் என்றறிந்து கொள்ளும் ஆர்வத்தை இக்கடிதங்கள் தூண்டுகின்றன.

அதோடு இக்கடிதங்களில் பலவும், சரத் சந்திர போஸ் குடும்பத்தினருடன் காந்திஜி கடைசிவரை பேணி வந்த ஆழ்ந்த நட்பையும் வெளிக்காட்டுகின்றன. சரத் சந்திர போஸ் மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடிய செய்தியே! 

சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து, மோடி இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்னும், பின்னுமாக பல விதமான விமர்சனங்களும், சர்ச்சைகளும் நிலவி வருகின்றன... ஆயினும் அதைப் பற்றிய தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையே இன்றும் நிலவுகிறது. காரணம் போதிய ஆவணங்கள் இல்லாத நிலையே!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது ஒரு சில குடும்பங்கள் செய்த தியாகத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்தியப் பிரபலங்களான அந்தக் குடும்பத்து நபர்களைத் தவிரவும் இந்திய விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள், சிறைச்சாலைகளில் வாடி வதங்கியவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். அத்தகைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரது வாழ்க்கைக் கதையும் வெளிக்கொண்டு வரப்பட்டு இந்திய சுதந்திர வரலாற்றில் சேர்க்கப் பட வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் நடைபெற்ற தேச விடுதலை வீரர்களது வாரிசுகளுக்கு விருதளிக்கும் விழாவில் பேசி இருந்தார். அதையொட்டி காந்திஜியின் வெளியிடப்படாத கடிதங்களும் கிடைக்குமாயின் உண்மையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தம் இன்னுயிரை ஈந்த மறைக்கப் பட்ட தலைவர்களது வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வகை ஏற்படலாம். ஆனால் அது நடக்குமா? இல்லையா? என்பதற்கான உத்தரவாதம் மட்டும் எப்போதும்  ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது. அவர்களே வரலாற்றை உருவாக்குபவர்களாக இருப்பதால் தான் இந்த நிலை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com