சர்வ தேச அளவில் பரதத்துக்கு கிடைக்கும் வரவேற்பு குச்சுப்புடிக்கு இல்லையோ?!

தமிழ்நாட்டுக்கு பரதம், கேரளாவுக்கு கதகளி, மோகினியாட்டம், ஒடிசாவுக்கு ஒடிஸி, அஸ்ஸாமுக்கு  சட்ரியா, மணிப்பூருக்கு மணிப்புரி, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பிராந்தியங்களுக்கு கதக்
சர்வ தேச அளவில் பரதத்துக்கு கிடைக்கும் வரவேற்பு குச்சுப்புடிக்கு இல்லையோ?!

இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று ஸ்பெஷலாக சில பாரம்பரிய நடன வகைகள் உண்டு. தமிழ்நாட்டுக்கு பரதம், கேரளாவுக்கு கதகளி, மோகினியாட்டம், ஒடிசாவுக்கு ஒடிஸி, அஸ்ஸாமுக்கு  சட்ரியா, மணிப்பூருக்கு மணிப்புரி, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பிராந்தியங்களுக்கு கதக், என்பது போல ஆந்திராவுக்கு என்றே பிரத்யேகமாக குச்சிப்புடி என்றொரு பாரம்பரிய நடனம் உண்டு. ஆனால் இந்தியா முழுதும் பரதத்திற்கு கிடைத்த அளவுக்கு பரவலான அறிமுகமும், வரவேற்பும் குச்சிப்புடிக்கு இல்லையோ! வெளிநாட்டினருக்கு இப்படி ஒரு நடனம் இருப்பதைப் பற்றிய கவனம் போதாதோ என்றொரு கவலை குச்சுப்புடி நடனத்தை அறிந்த எல்லோருக்கும்  வந்தது போலவே,  ஆந்திராவைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞரான ஹலீம் கானுக்கும் வந்தது. அதன் எதிரொலியாகத் தொடங்கப் பட்டது தான் ‘Dressed To Dance' எனும் திரைப்பட முயற்சி!

ஹலீம் கான்,  ஒரு  ஆணாக இருந்த போதிலும் குச்சிப்புடி நடனம் ஆடும்போது மட்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை சகலமும் ஒரு பெண்ணாகவே உருமாறி விடுகிறார். குச்சுப்புடி நடனத்தின் போது அவரது உடைகளாகட்டும், ஆபரணங்களாகட்டும், ஒப்பனைகளாகட்டும், முக பாவனைகளாகட்டும் அனைத்துமே அவரை முழுமையான பெண்ணாகவே காட்டும்படியாகப் புனையப்பட்டிருக்கும். பிற குச்சுப்புடி நடனைக் கலைஞர்களிடமிருந்து ஹலீம் கானை வித்யாசப்படுத்திக் காட்டுவது அவரது இந்த முயற்சியும், சிரத்தையும் தான்.

இதுவரை 850 முறைகளுக்கும் மேல் தனியாகவும், குழுவாகவும் குச்சுப்புடி நடனமாடி ஆந்திராவைப் பொறுத்தவரை பிரபலமான குச்சுப்புடி நடனக்கலைஞராக இருக்கும் ஹலீம் கான், ஒரு சிறந்த நடனக் கலைஞராக தனது அர்ப்பணிப்பின் அடுத்தபடியாக தேர்ந்தெடுத்திருப்பது திரைப்படத்தை. ஆம்... குச்சிப்புடியையும் பரதம் போலவே சர்வதேச அளவில் கணிசமாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் பொருட்டு ‘Dressed To Dance' எனும் திரைப்படத்தில்  நடிக்க முடிவெடுத்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்கி தயாரிக்கப் போவது ஸ்ரீனு ரெட்டி மற்றும் ஷ்ராவன் ஜடலா.

இந்தப் படம், ஒரு நடனக் கலைஞர் தனது ஆழ்மனதில் தோன்றக் கூடிய படைப்புத் திறனை தேர்ந்த கலைவடிவமாக மாற்றி எப்படி தனது பார்வையாளர்களுக்காக மேடையில் வழங்குகிறார் என்பதைப் பற்றி பேசுவதாக இருக்குமாம். இப்படத்தின் வாயிலாக பார்வையாளர்களான நாம் ஒரு நடனக் கலைஞரின் வாழ்வில் அவருடன் மிக நெருக்கமாகப் பயணித்து அவரது உணர்வுகளை, பாவனைகளை, எண்ணங்களை, சரியான வகையில் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் ஹலீம் கான். 

இவரது முயற்சியால் சர்வ தேச அளவில், பரதம் போலவே குச்சுப்புடி கற்பவர்களது எண்ணிக்கையும் உயர்ந்தால் நல்லது தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com