கத்தார் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

கத்தாரிலிருக்கும் இந்தியர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கத்தார் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

கத்தாரிலிருக்கும் இந்தியர்கள், தங்களது விமானப் பயணத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள அவரவர் பயண முகவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும், என இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

கத்தார் நாடு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி இஸ்லாமிய நாடுகளில் சில அந்நாட்டுடனான அரசியல் உறவு மற்றும் போக்குவரத்தை துண்டித்துக் கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் கத்தாரிலிருக்கும் இந்தியர்களின் கலக்கத்தைப் போக்க மேற்கண்டவாறு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்திய தூதரகம் சார்பில், கத்தாருடன் விமானப் போக்குவரத்தை துண்டித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் விமானப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து, அவர்கள் வசூலித்த விமானக் கட்டணங்களை உடனடியாகத் திருப்பி அளிக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் கத்தாரிலிருந்து இந்தியா திரும்ப நினைக்கும் இந்தியர்கள் தங்களது விமானப் பயண முகவர்களுடன் நீடித்த தொடர்பில் இருந்தால், பயண மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும் கத்தாரிலிருக்கும் இந்தியர்கள் நிலை குறித்து இந்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதோடு, கத்தாரிலிருக்கும் தூதரக அதிகாரிகளுடன் நிரந்தரத் தொடர்பில் இருப்பதால் அங்கிருக்கும் இந்தியர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியத் தூதரகம் கத்தாரில் இருக்கும் இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதுமட்டுமல்ல; இந்திய ஊடகங்களைக் கண்டு உடனடிச் செய்திகளை அறிந்து கொண்டு, நடப்பவற்றைக் குறித்து தெளிவாக இருக்க வேண்டும், வீண் வதந்திகளை நம்பி ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட 4 இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரத்தில் கத்தார் நாடு தொடர்ந்து தீவிரவாதத்தை ஊக்குவிப்பதால் தங்களது நாடுகளின் பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் நிலவுகிறது எனக் குற்றம் சாட்டி அந்நாட்டுடனான தங்களது உறவை ரத்து செய்து விட்டதாக அறிவித்து விட்டன. இவ்விதமாக கடந்த ஒரு வருட காலமாக மேற்கண்ட நாடுகள் கத்தார் மீது எழுப்பிக் கொண்டிருந்த தீவிரவாதக் குற்றச்சாட்டு ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த நாடுகளைத் தொடர்ந்து மாலத்தீவு, ஏமன், மொரீஸியஸ், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் கத்தாருடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளன.

இந்நிலையில் அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு குறித்து அனைத்து நாடுகளும் கவலையுறும் சூழல் அங்கு நிலவி வருகிறது.

கத்தாரிலிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 6,30,000. பிற நாட்டுக் மக்களின் பாதுகாப்பு குறித்து கத்தார் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், உணவுத் தேவையும், இயல்பு வாழ்க்கையும் கெடாமலிருக்குமாறு கத்தார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நாட்டு தூதரகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பெருமளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கத்தார் முக்கிய இடம் வகிக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com